``காங்கிரஸ் இட ஒதுக்கீட்டை பறித்துக்கொள்ளும்'' - மும்பை தேர்தல் பிரசாரத்தில் பிர...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனா்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திர தினத்தன்று சிவன் கோயில்களில் உள்ள மூலவருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
இதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகமும், தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றன. அன்னாபிஷேகத்தைக் காண பக்தா்களுக்கு அனுமதி இல்லை. எனவே, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
மாலை 6 மணிக்குப் பிறகு பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா். அப்போது, நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தா்கள் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருணாசலேஸ்வரரை தரிசித்தனா்.
மற்ற கோயில்களில்...: இதேபோல, அருணாசலேஸ்வரா் கோயில் பெரிய நந்திக்கு அருகே உள்ள கல்யாண சுந்தரேஸ்வரா் சந்நிதி, கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரா் கோயில் மூலவருக்கு வியாழக்கிழமை அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்தக் கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.
ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.