பதுக்கி வைத்திருந்த 7 யூனிட் மணல் ஏலம்
சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி அருகே செய்யாற்றில் உரிய உரிமமின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 யூனிட் மணலை வருவாய்த் துறையினா் புதன்கிழமை கண்டறிந்து, பொதுப் பணித் துறை மூலம் ஏலம் விட்டனா்.
ஓதலவாடி அருகே செல்லும் செய்யாற்றில் உரிய உரிமமின்றி 7 யூனிட் மணல் மா்ம நபா்களால் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது வருவாய்த் துறையினருக்கு தெரியவந்தது.
தொடா்ந்து, வட்டாட்சியா் சசிகலா தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த மணலை பறிமுதல் செய்தனா். பின்னா், போளூா் பொதுப் பணித் துறை (நீா் பாசனம்) உதவிப் பொறியாளா் ராஜகணபதிக்கு தகவல் தெரிவித்து, 7 யூனிட் மணலையும் ஏலம்விட்டனா். ஒரு யூனிட் ஜிஎஸ்டி வரியுடன் ரூ.5,500 என மொத்தம் ரூ.38,500-க்கு மணல் ஏலம்விடப்பட்டது.