நள்ளிரவில் லன்ச்; காலையில் டின்னர்... நைட் ஷிஃப்ட் மக்களுக்கு குட்நைட் டிப்ஸ்!
தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட்: ப. சிதம்பரம்
தில்லி அரசியலை மையமாக வைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
பட்ஜெட் தயாரிப்பின்போது ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை மத்திய அரசு மறந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
2025-26 மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தை மாநிலங்களவையில் தொடங்கி வைத்து ப. சிதம்பரம் பேசியதாவது,
''நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் மூலதனச் செலவினங்களையும் மாநிலங்களுக்கான மானிய உதவிகளையும் குறைப்பதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை மேம்படுத்துவதாகக் கூறி, அதை மோசமான நிலைக்கு மாற்றியுள்ளார்.
பட்ஜெட்டுக்கு பின்னால் ஒரு தத்துவம் இருக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் அப்படி எதுவும் இல்லை. இது அரசியலை மையப்படுத்தி முன்மொழியப்பட்ட பட்ஜெட் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இது குறித்து மேலும் விரிவாகப் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்துக்காக நிர்மலா சீதாராமனை நான் பாராட்டுகிறேன். அவரின் பட்ஜெட் நோக்கங்களில் ஒன்று இரு நாள்களுக்கு முன்பு நடந்தேறியது (தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி).
அவர் (நிதியமைச்சர்) எதையும் செய்யவில்லை. வருமான வரியின் மீதும் தில்லி தேர்தலின் மீதும் மட்டுமே கவனமாக இருந்தார். இது இந்தியக் குடும்பங்களை முடக்கிவிடும். இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு 25.2 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகச் சரிந்துள்ளது.
2023 தரவுகளின்படி, ஒரு கிராமப்புற குடும்பத்தின் சராசரி மாதாந்திர செலவு ரூ. 4,226 ஆக இருந்தது. நகர்ப்புறங்களில் ரூ. 6,996 ஆக இருந்தது.
சமூகத்தில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத சராசரி குடும்பங்களுக்கு மத்திய பட்ஜெட் என்ன அறிவித்துள்ளது. ஏழ்மையிலுள்ள 25 சதவீத குடும்பங்களுக்கு இந்த அறிவிப்பில் என்ன கிடைக்கும்.
கடந்த 7 ஆண்டுகளில் தனிநபரின் (ஆண்) மாத வருவாய் ரூ. 12,665-லிருந்து ரூ. 11,858 ஆக குறைந்துள்ளது. சுயதொழில் செய்யும் நபரின் (ஆண்) மாத வருவாய் ரூ. 9,454-லிருந்து ரூ. 8,591 ஆக குறைந்துள்ளது.
மூலதன செலவைக் குறைப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். அவர் கூறிய 4.8 சதவீத இலக்கை அவர் எவ்வாறு எட்டுவார்?
மத்திய அரசின் மூலதன செலவினத்தை ரூ. 92,682 கோடி குறைத்தார். வருவாய் செலவை குறைக்கவில்லை. மூலதன செலவுக்காக மாநிலங்களுக்கு வழங்கும் மானியத்தை அவர் குறைத்துள்ளார். இது ஒரு சிறந்த பொருளாதாரம் எனக் கூற முடியாது'' என சிதம்பரம் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்