தில்லிக் கம்பன் கழக நிறுவனருக்கு "கம்பப் பணி வள்ளல்' விருது
தில்லிக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டும் வகையில் அந்த அமைப்பின் நிறுவனர் - தலைவர் கே.வி.கே.பெருமாளுக்கு அகில இலங்கை கம்பன் கழகம் "கம்பப் பணி வள்ளல்' விருது வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தில்லிக் கம்பன் கழகத்தின் செயலர் எஸ்.பி.முத்துவேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தில்லிக் கம்பன் கழகம் பல்வேறு தமிழ் அறிஞர்களை தில்லிக்கு வரவழைத்து சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல்வேறு இலக்கியத் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
மேலும், தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்தி, அடுத்த தலைமுறைக்குக் கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.
இந்நிலையில், தில்லிக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டி, அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் - தலைவர் கே.வி.கே. பெருமாளுக்கு "கம்பப் பணி வள்ளல்' என்ற விருதை அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் நிறுவனரும், பிரபல ஆன்மிகப் பேச்சாளருமான கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் வழங்கியிருக்கிறார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சேர்கம்பன் புகழ்போலத் திகழ்ந்து வாழ்வீர்' எனும் தலைப்பிலான வாழ்த்துப் பாடல் வாயிலாக இந்த விருதை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தனக்கு வழங்கியிருப்பதாக கே.வி.கே. பெருமாள் தெரிவித்தார்.