திவ்யபாரதியுடன் காதலா... என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்?!
ஜி.வி.பிரகாஷும் நடிகை திவ்யபாரதியும் தங்களின் உறவு குறித்து முதல்முறையாக மனம்திறந்துள்ளனர்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதி கடந்தாண்டு விவாகரத்து பெற்றது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில் அவர்களது விவாகரத்துக்குக் காரணமாக நடிகை திவ்யபாரதி சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்டார். அவர், ஜி.வி.பிரகாஷ் உடன் டேட்டிங் செல்வதாக செய்திகள் வெளியாகின.
இதையும் படிக்க | ஏகே - 64 இயக்குநர் இவரா?
ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திவ்யபாரதி, விரைவில் வெளியாகவுள்ள கிங்ஸ்டன் படத்திலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். பேச்சுலர் படத்தில் இருவரின் காதல் காட்சிகள் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது. ஜி.வி. விவாகரத்தை அறிவித்தவுடன் மேலும் அதிகமாக இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷும், திவ்யபாரதியும் தங்கள் இருவரின் உறவு குறித்து முதல்முறையாக வெளியில் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய ஜி.வி.பிரகாஷ், ”பேச்சுலர் படத்திற்குப் பிறகு நாங்கள் இருவரும் டேட் செய்வதாக பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருவருமே படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே சந்தித்துக் கொள்வோம். நாங்கள் சாதாரண நண்பர்கள் மட்டுமே. இருவரும் வெளியில் எங்கும் சந்தித்துக் கொண்டதில்லை. திரையில் எங்கள் இருவரின் நடிப்பு பேசப்படுவதால் அவ்வாறு மக்கள் நினைக்கலாம். ஆனால், எங்களுக்குள் அப்படியான உறவு எதுவும் இல்லை” என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.
திவ்யபாரதி பேசியபோது, ”ஜி.வி. திருமண வாழ்வு குறித்து என்னிடம் அனைவரும் கேட்பார்கள். நான் அவர்களின் குடும்பத்தைப் பிரித்துவிட்டதாக எனக்கு பெண்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்பார்கள்.
ஜி.வி. சைந்தவி ஒன்றாக இசைக் கச்சேரியில் பாடியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனிமேல் நம்மிடம் இதுகுறித்து யாரும் பேசமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், அதன் பின்னர்தான் என்னிடம் இதுபற்றி அதிகமாக கேள்வி கேட்டனர். அவற்றை ஜி.வி.க்கு அனுப்பி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள் என நான் கேட்டால், ‘இவர்கள் இப்படித்தான். விடுங்க பாத்துக்கலாம்’ என்று பதிலளிப்பார். சில நேரங்களில் அவ்வாறு அனைவரும் பேசுவது கஷ்டமாக இருக்கும். ஆனால் மக்கள், மீடியா போன்றவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.