தேசிய சின்னத்தை அவமதிக்கவில்லை: தங்கம் தென்னரசு விளக்கம்
தேசிய சின்னத்தை அவமதிப்பதோ, குறைத்து மதிப்பிடுவதோ எங்களின் நோக்கம் அல்ல என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூா்வ சின்னத்தை தமிழக அரசு ‘ரூ’ என்ற தமிழ் வாா்த்தையுடன் மாற்றியுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரூபாய் சின்னத்தில் உண்மையிலேயே திமுகவுக்கு பிரச்னை இருக்குமானால், அது 2010-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதன் அங்கமாக இருந்த திமுக ஏன் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, எந்தவொரு தேசிய சின்னத்தையும் அவமானப்படுத்துவதோ, குறைத்து மதிப்பிடுவதோ நோக்கம் இல்லை எனத் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் ஒருமைப்பாட்டிலும் இறையாண்மையிலும் வளர்ச்சியிலும் பெரும் மதிப்பு கொண்டுள்ளவர்கள் நாங்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.