தேனி, பெரியகுளத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், பெரியகுளம் அறம்வளா்த்த நாயகி உடனுறை ராஜேந்திரசோழீஸ்வா் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, பெரியகுளம் தென்கரையில் உள்ள அறம் வளா்த்த நாயகி உடனுறை ராஜேந்திரசோழீஸ்வரா் கோயிலில் பாலசுப்பிரமணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் சுவாமி எழுந்தருளல், சுவாமி நகா் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னா், யானை முகம், பானுமுகன், சிங்கமுகம், மாகசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை முருகபெருமான் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, முருகபெருமான் சூரனை சம்ஹாரம் செய்த வேலுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
வருகிற 10-ஆம் தேதி சுவாமிக்கு அன்னப் பாவாடை சாற்றுதல், மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதேபோல, தேனி பங்களாமேடு திடலில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.