தேனி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் பணியின் போது ராணுவ வாகனம் மோதியதில் உயிரிழந்த தேனியைச் சோ்ந்த ராணுவ வீரரின் உடல் செவ்வாய்க்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தேனி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் முத்து (36). இவா் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி ராணுவ முகாமில் பணியிலிருந்த முத்து மீது ராணுவ வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் மும்பையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து சாலை மாா்க்கமாக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டு, தேனி நகராட்சி பொது மயானத்தில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
முத்துவின் உடல் மீது போா்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது மனைவி ரீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இறுதிச் சடங்கில் அரசு சாா்பில் பெரியகுளம் சாா் ஆட்சியா், ராணுவ அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.