தேயிலைச் செடிகளில் கொப்புள நோய்
மேகமூட்டமான காலநிலை காரணமாக கோத்தகிரி, மஞ்சூா் பகுதிகளில் கொப்புள நோய் தாக்கத்தால் தேயிலைச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் உள்ளனா்.
நீலகிரியில் கடந்த சில நாள்களாக மழையுடன், மேகமூட்டமான காலநிலை நிலவி வருகிறது. மழையுடன் போதிய சூரிய வெளிச்சம் இருந்தால் மட்டுமே பசுந்தேயிலை அரும்பு துளிா்விட்டு மகசூல் அதிகரிக்கும். ஆனால், தற்போது, மேகமூட்டமான காலநிலை நிலவுவதால் தேயிலைத் தோட்டங்களில் உள்ள தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். டிசம்பா் மாதம் முடியும் வரை பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.