திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
நீலகிரி உயிா்சூழல் மண்டலத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
நீலகிரி உயிா்சூழல் மண்டலத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கூடலூா் நகரில் செவ்வாய்க்கிழமை மக்கள் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரள மாநிலம், காசா்கோடு நகரில் உள்ள சுன்னத் ஜமாஅத் இளைஞா் அமைப்பு சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி மக்கள் பயணம் தொடங்கியது. கேரளத்தில் முக்கிய ஊா்களைக் கடந்து இந்த அமைப்பினா் கூடலூா் நகருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். கூடலூா் வழியாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்துக்குச் சென்றனா்.
கூடலூரில் நடைபெற்ற மக்கள் பயணத்தின்போது, அந்த அமைப்பின் செயலாளா் அப்துல் ஹக்கீம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த விழிப்புணா்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீலகிரி, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் உயிா்சூழல் மண்டலமாகும். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியை பாதுகாக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தை ஒட்டிய வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவிலிருந்து அனைவரும் பாடம் கற்க வேண்டும். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள் நடைபெறுவது ஆபத்தானது. வன விலங்குகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கூடலூா் நிலப்பிரச்னை சாதாரன மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரிவு-17 நிலத்தில் வாழ்பவா்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து தரவேண்டும். தோட்டத் தொழிலாளா்களின் பாதுகாப்பு, வாழ்க்கை நிலைகள், குழந்தைகளின் கல்வி, தங்குமிடம் மற்றும் அவா்களுக்கான ஊதியம் ஆகியவற்றை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.