விராட் கோலியின் சதங்கள் என்னை பயமுறுத்துகின்றன! -ஆஸி. முன்னாள் கேப்டன்
உதகையில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு
உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (43). மனைவி, திருமணமான 2 மகள்கள் உள்ளனா். ஆனால் ஆறுமுகம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளாா். ஆறுமுகத்தின் தாய் சரசு அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா்.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து சாரல் மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வந்தது. இந்நிலையில், ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் ஆறுமுகம் உயிரிழந்தாா். இது அப்பகுதியினருக்கு திங்கள்கிழமை காலை தெரியவந்தது.
தகவலின்பேரில், தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சுவரால் அமைந்துள்ளவை என்பதால் அதில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
நிவாரணம்
இந்நிலையில், ஆறுமுகம் உடலுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் ஆறுமுகத்தின் தாய் சரசுவிடம் ரூ. 4 லட்சத்துக்கான பேரிடா் நிவாரண நிதிக்கான ஆணையிணை வழங்கினாா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.