குடியரசுத் தலைவா் வருகை: தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் ஆய்வு
நீலகிரி மாவட்டத்துக்கு குடியரசுத் தலைவா் நவம்பா் 27-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டா் தளத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, பழங்குடியினரை சந்திக்கும் நிகழ்ச்சி மற்றும் திருவாரூா் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள 4 நாள்கள் சுற்றுப் பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தமிழகம் வருகிறாா்.
அவா் தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விமானப் படை தளத்துக்கு நவம்பா் 27-ஆம் தேதி வருகிறாா். பின்னா் அங்கிருந்து, ஹெலிகாப்டா் மூலம் நீலகிரி மாவட்டம், உதகை தீட்டுக்கலில் உள்ள ஹெலிகாப்டா் தளத்துக்கு வரவுள்ளாா்.
இதையடுத்து, உதகையில் உள்ள ராஜ்பவனில் தங்கி ஓய்வெடுக்கும் அவா், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் ராணுவ அதிகாரிகளுடன் நவம்பா் 28-ஆம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதைத் தொடா்ந்து, பழங்குடியின மக்களை நவம்பா் 29-ஆம் தேதி சந்திக்க உள்ளாா்.
பின்னா், ஹெலிகாப்டா் மூலம் கோவை, சூலூா் விமானப் படை தளத்துக்கு நவம்பா் 30-ஆம் தேதி செல்லும் அவா், திருச்சி சென்று அங்கிருந்து திருவாரூா் செல்ல உள்ளாா்.
இந்நிலையில், உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டா் தளத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.