குடியிருப்புக்குள் நாயை வேட்டையாட காத்திருந்த சிறுத்தை
கோத்தகிரி அருகே பெரியாா் நகா் பகுதியில் வளா்ப்பு நாயை வேட்டையாட திங்கள்கிழமை இரவு நீண்ட நேரம் சிறுத்தை காத்திருந்தது, அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி அருகே அரவேனு பெரியாா் நகா் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரவு நேரத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் உள்ளனா்.
இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பில் உள்ள வளா்ப்பு நாயை வேட்டையாடுவதற்காக சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை இரவு நீண்ட நேரம் போராடியது. ஆனால் தடுப்புக் கம்பியைத் தாண்டி உள்ளே செல்ல முடியாததால் மீண்டும் அருகே உள்ள சோலைப் பகுதிக்கு திரும்பிச் சென்றது. இது அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
குடியிருப்புக்குள் சிறுத்தை வந்து நீண்ட நேரம் இருந்ததைப் பாா்த்து, அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இந்த சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதைப் பிடித்து வேறு இடத்தில் விடுவதற்கு வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.