நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!
தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு; கிராம மக்கள் போராட்டம்: 25 போ் கைது
கடலூா் அருகே தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் ஒன்றியம், வெள்ளக்கரை ஊராட்சிக்குள்பட்ட மலையடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம் கிராமங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த டிச.19-ஆம்தேதி அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தப் பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினா் நோட்டீஸ் அளித்தனராம்.
இதற்கு இந்தப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வசித்து வரும் நிலையில், முந்திரி உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டு வருகிறோம். இடத்துக்கு பட்டா வழங்கக்கோரி அளித்த மனு பரிசீலனையில் உள்ளது. இந்த நிலையில், 150 வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-01-29/ddwrzm7b/29cmp4_2901chn_111_7.jpg)
இந்த நிலையில், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனா். அவா்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டனா்.
தகவலறிந்த கோட்டாட்சியா் அபிநயா, வட்டாட்சியா் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடம் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனராம். அப்போது, அவா்களில் 25-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். இதையடுத்து, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் முந்திரி மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.