Guar: இந்தியா உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட்; எதற்கு...
நவீன தகன மேடை: வேலை முடிந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை; நகராட்சி அலட்சியம் காரணமா? -குமுறும் மக்கள்
விழுப்புரம் மாவட்டம் கே.கே. ரோட்டில், ரோட்டரி சங்க பங்களிப்புடன் “முக்தி” என்ற பெயரில் நவீன தகன மேடை ஒன்று கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
“முக்தி”
கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், இறுதிச் சடங்கிற்கு பலர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. “முக்தி” என்ற நவீன தகன மேடை போதாமையால், கூடுதலாக இன்னொரு நவீன தகன மேடை தேவை என்ற கோரிக்கை எழுந்தது.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, நகரையொட்டி உள்ள கிராமங்களில் வசிப்பவர்களும் “முக்தி” நவீன தகன மேடையையே பயன்படுத்தி வந்தனர்.
நகரில் பல இடங்களில் மயானம் இருந்தாலும், “முக்தி”-யே மக்களின் பிரதான தேர்வாக உள்ளது. காரணம் – மற்ற மயானங்களில் தகனம் செய்ய குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் செலவாகிறது. அதே சமயத்தில், “முக்தி” என்ற நவீன தகன மேடையில் தகனம் செய்தால் ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவாகவே செலவாகிறது. இதுவே மக்கள் இங்கு அதிகமாக வருவதற்கான முக்கிய காரணமாகும்.

புதிய தகன மேடை கட்டுதல்!
இந்நிலையில், `நகரைச் சுற்றியுள்ள திசைகளில் கூடுதலாக நவீன தகன மேடை அமைக்க வேண்டும்' என மக்களின் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது.
இதையடுத்து, கிழக்கு பாண்டிசாலையில், மகாராஜபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே ரூ.1.50 கோடி செலவில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நவீன தகன மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இங்கு கட்டிடப் பணி, எரிவாயு மூலமாக இயங்கும் தகன மேடை, புகை வெளியேறும் கோபுரம், மின்சார இணைப்பு உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் நிறைவு பெற்றுவிட்டன. ஆனால் 7 மாதங்களுக்கு மேலாகியும் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், நகராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
சமூக விரோதிகளின் புகலிடம்!
இதனால், அவ்விடம் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்:
“ஆட்சியாளர்களின் அலட்சியமே இந்தத் தாமதத்திற்குக் காரணம். அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிவடைந்த நிலையில், 7 மாதங்களாக கிடப்பில் போடுவதற்குக் காரணம் என்ன? நவீன எரிவாயு தகன மேடையை மிக விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் இருக்காது,” என்றும் தெரிவித்தனர்.

ஆணையரின் விளக்கம்
இதுகுறித்து நகராட்சி ஆணையர் வசந்தி கூறுகையில்:
“மகாராஜபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகே ரூ.1.54 கோடியில் நவீன எரிவாயு தகன மேடையின் உள்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. திட்ட மதிப்பீடு செய்யும்போது, சுற்றுச்சுவருக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கான நிதி தற்போது தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சற்று தாமதம் ஏற்பட்டது.
தற்போது ரூ.30 லட்சத்தில் சுற்றுச்சுவர் மற்றும் நுழைவாயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிந்ததும், வளாகத்தில் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்படும். அடுத்த மாதத்திற்குள் நவீன தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்,” என்றார்.