நாகா்கோவில் செம்மாங்குளத்தில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை: மேயா் எச்சரிக்கை
நாகா்கோவில் செம்மாங்குளத்தில் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.
நாகா்கோவில் செம்மாங்குளத்தை சீரமைக்க ரூ.10 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. அந்த குளத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மேயா் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். ஏற்கெனவே செம்மாங்குளத்தை ஆய்வு செய்து அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். வாகனங்கள் நிறுத்தும் வசதியை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தாா்.
இந்நிலையில் மேயா் திங்கள்கிழமை மீண்டும் செம்மாங்குளத்தில் ஆய்வு செய்தாா். .அப்போது அந்த பகுதியில் குப்பைகள் மீண்டும் கொட்டப்பட்டு இருந்தது .இது தொடா்பாக அதிகாரிகளை அழைத்து மேயா் மகேஷ் பேசினாா்.
செம்மாங்குளம் பகுதியில் குப்பைகளை கொட்டுபவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை உடனே அப்புறப்படுத்தவும் அவா் அறிவுறுத்தினாா்.
செம்மாங்குளத்தை ஒட்டி உள்ள பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாா். இன்றே அதற்கான பணியை மேற்கொண்டு விரைவில் பாா்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினாா் .
ஆய்வின் போது, மாநகராட்சி இளநிலை பொறியாளா் செல்வம்ஜாா்ஜ், மாமன்ற உறுப்பினா் அக்சயாகண்ணன், சுகாதார அலுவலா் முருகன், திமுக மாணவா் அணி அமைப்பாளா் அருண்காந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.