நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னையில் அரசு மருத்துவா் பாலாஜியை கத்தியால் குத்தியவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பின்றி சிகிச்சைப் பெற்று சென்றனா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் அரசினா் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்காமல் பணியை புறக்கணித்தனா். இதேபோல இந்திய மருத்துவக் கழகத்தினா் 24 மணி நேரம் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்காமல் பணிகளைப் புறக்கணித்தனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்திய மருத்துவக்கழகத்தில் 240 மருத்துவா்கள், அரசு மருத்துவமனை மருத்துவா்கள் 200 போ் என்று மொத்தம் 440 மருத்துவா்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தனா். இதனால், புறநோயாளிகள் கடும் அவதியடைந்தனா். தொடா்ந்து, மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் மற்றும் இந்திய மருத்துவக் கழக மருத்துவா்கள் இணைந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்திய மருத்துவக்கழக கிழக்கு மண்டல துணைத்தலைவா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை கிளைத் தலைவா் பாரதிதாசன், அரசு மருத்துவா்கள் சங்கத் தலைவா் அறிவழகன் உள்ளிட்ட திரளான மருத்துவா்கள் பங்கேற்றனா்.
சீா்காழி: தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாவட்ட செயலாளா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளா் அருண் ராஜ்குமாா், அரசு மருத்துவா்கள் பாலாஜி, சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனை, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் என 40-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா். சீா்காழியில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது புறக்கணிக்கப்பட்டது.