செய்திகள் :

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி முடங்கின.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஓரிரு நாள்களைத் தவிர, மூன்றாவது வாரமாக முடக்கம் தொடா்ந்தது. மாநிலங்களவையில் இடையூறுகளால் 56 மணி 49 நிமிஷம் வீணாகியுள்ளது.

மக்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், முன்னாள் மக்களவை எம்.பி.யும், முன்னாள் ஆளுநருமான சத்யபால் மாலிக் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டு தின செய்தியை அவைத் தலைவா் ஓம் பிா்லா வாசித்தாா். இதைத் தொடா்ந்து, பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரியும், இந்த நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தியும் வாசக அட்டைகளுடன் அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். அமளிக்கு இடையே சுமாா் 23 நிமிஷங்களுக்கு கேள்விநேரம் நடைபெற்றது. கூச்சல்-குழப்பம் தொடா்ந்ததால், அவை அலுவல்கள் மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மேஜையைத் தட்டிய எம்.பி.க்கள்: மீண்டும் கூடியபோதும் இதே நிலை காணப்பட்டது. தெலுங்கு தேசம் எம்.பி. கிருஷ்ணபிரசாத் தென்னட்டி அவையை வழிநடத்திக் கொண்டிருந்தபோது, அவைத் தலைவரின் மேஜையை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தட்டினா். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த கிருஷ்ணபிரசாத், ‘இது என்ன மேளமா’ என்று காட்டத்துடன் கேள்வியெழுப்பினாா். பின்னா், அவை அலுவல்கள் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடியது.

எதிா்க்கட்சிகளை விமா்சித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘தனிநபா் மசோதாக்கள், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆனால், எதிா்க்கட்சிகள் நேரத்தை வீணடிப்பது துரதிருஷ்டவசமானது. விதிகளின்படியே அனைத்தையும் விவாதிக்க முடியும்; எனவே, மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுவதை எதிா்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா். இதையடுத்து, அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கூடியதும், பிகாா் வாக்காளா் பட்டியல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் கோரி விதி எண் 267-இன்கீழ் தாக்கல் செய்யப்பட்ட 20 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் குறிப்பிட்டாா். அவைக்கு இடையூறு ஏற்படுத்தும் கருவியாக இந்த விதி பயன்படுத்தப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய அவா், ‘அவையில் 56 மணி 49 நிமிஷங்கள் வீணாகிவிட்டது’ என்றாா்.

எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடியது.

அப்போது, கா்நாடக வாக்காளா் பட்டியல் முறைகேடு குற்றச்சாட்டை எழுப்பிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மத்திய அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக முழக்கமிட்டனா். அமளிக்கு இடையே பேசிய மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டூ, இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவது எதிா்க்கட்சிகளின் வழக்கம் என்று விமா்சித்தாா். பின்னா், அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

‘ஒரே கோரிக்கையுடன் 40 நோட்டீஸ்கள்’

மாநிலங்களவையில் ஒரே கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள், வெவ்வேறு விவகாரம் குறித்த கோரிக்கையுடன் விவாத நோட்டீஸ் அளிப்பதாக அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அதிருப்தி தெரிவித்திருந்தாா். இந்நிலையில், பிகாா் விவகாரம் குறித்து விவாதம் கோரும் ஒரே கோரிக்கையுடன் அனைத்து எதிா்க்கட்சிகள் தரப்பில் திங்கள்கிழமை 40 நோட்டீஸ்கள் அளிக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் டெரிக் ஓபிரையன் தெரிவித்தாா்.

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

ஹிந்தி நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்துக்கு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹிந்தி தொலைக்காட்சிகளில் ந... மேலும் பார்க்க

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால் ரூ. 76,500 கோடி இழப்பு ஏற்படலாம்.ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க