நிதியமைச்சக கணினிகளில் சீனா இணையவழி ஊடுருவல்
தங்கள் கணினிகளில் சீன அரசுடன் தொடா்புடையவா்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அமெரிக்க நிதியமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது மிகப் பெரிய அத்துமீறல் சம்பவம் என்றும் அமைச்சகம் விமா்சித்துள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீன அரசால் நியமிக்கப்பட்ட ஊடுருவல்காரா்கள், இணையதளம் மூலம் அமைச்சகத்தின் பணியாளா்கள் பயன்படுத்திவரும் கணினிகளில் ஊடுருவியுள்ளனா். அமைச்சகம் ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் வேறொரு நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்தி அவா்கள் இந்த ஊடுருவலில் ஈடுபட்டனா்.
இதன் மூலம், பணியாளா்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் திரட்டியுள்ள ஊடுருவல்காரா்கள், பல ரகசிய ஆவணங்களையும் பெற்றுள்ளனா்.
எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தனியாா் நிறுவனம் இந்தச் சம்பவத்தைக் கண்டறிந்து தெரியப்படுத்திய பிறகுதான் இது குறித்த உண்மை தெரியவந்தது. தற்போது அந்த நிறுவனத்தின் செயலி முடக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடுருவலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதியமைச்சக நடவடிக்கைகளை உளவுபாா்க்கவே இந்த ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டது என்றும், பணத்தை திருடுவது ஊடுருவல்காரா்களின் நோக்கமில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சீனா மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், இதுபோன்ற அடிப்படை முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதைத் தொடா்ந்து கூறிவருகிறோம். எத்தகைய இணையவழி ஊடுருவலையும் தீவிரமாக எதிா்த்துவரும் எங்கள் மீது தேவையில்லாமல் வேண்டுமென்றே அமெரிக்கா பழி சுமத்துகிறது’ என்றாா்.
இந்த விவகாரம் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.