திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி!
நினைவேந்தலில் சார்லி கிர்க் மனைவி அருகில் நடனமாடிய டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தலில், அவரின் மனைவி அருகே டிரம்ப் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் செப்.10 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது 22 வயது இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரின் மறைவையொட்டி அரிஸோனா மாகாணத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான அரங்கத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று (செப். 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வலது சாரியைச் சேர்ந்த 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நினைவேந்தலில் பங்கேற்ற நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தித் தொடர்பாளர் உள்ளிட்டோர் மேடையில் தோன்றி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது சார்லி கிர்க்கை குறிப்பிட்டுப் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரத்திற்காக தனது உயிரை தியாகம் செய்து சார்லி தியாகியாகியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அரங்கத்தில் இருக்கும் யாரும் சார்லியை மறக்க முடியாது என்றும் அவர் வரலாறாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில் அமெரிக்காவின் புகழை பட்டியலிடும் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது மேடையில் அதிபர் டிரம்ப் உடன் சார்லி கிர்க் மனைவி, எரிகா கிர்க் இருந்தார்.
பாடலின் வரிகளை முனுமுனுத்தபடியே அதிபர் டிரம்ப், எரிகாவின் அருகில் நின்று நடனமாடினார். முகத்தில் சோகத்துடன் நின்றிருந்த எரிகா, கண்ணீர் சிந்த புன்னகைத்தார்.
சார்லி கிர்க் நினைவேந்தலில் எடுக்கப்பட்ட இந்த விடியோவைப் பகிர்ந்து சிலர் டிரம்ப்பின் செயலை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க |அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக் கூடாது! ஊடகவியலாளர்களுக்கு பென்டகன் கட்டுப்பாடு!