`நீங்க எங்க எதிரி இல்லை; தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள்' - TVK விமர்சனத்துக்கு NTK பதில்
த.வெ.க எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது?
தேர்தல் வியூக வகுப்பாளர்களின் ஆலோசனையில் அரசியல் மேற்கொள்வது `பணக்கொழுப்பு’ என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனத்துக்கு ரியாக்ட் செய்த த.வெ.க தரப்பு `திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவதில் ஆச்சரியமில்லை’ என்றது. இந்நிலையில் சீமான் `பணக்கொழுப்பு` என பொதுவாகவே சொன்னார் என விளக்கமளித்திருக்கிறார் நா.த.க கொள்கைப் பரப்புச் செயலாளர் துரைமுருகன்.
நா.த.க சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை என்றார் அண்ணன் சீமான். அந்த நடவடிக்கைகளை, ‘பணக்கொழுப்பு’ என பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு த.வெ.க எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளது நா.த.க.
தொடர்ந்து ``திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து வாய்திறக்க மாட்டோமென பத்து நாட்களுக்கு மேல் மௌன விரதம் இருந்தவர்கள், இப்போது பொத்தாம் பொதுவான விமர்சனத்திற்குப் பொங்குவதேன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல, வாய்க்கொழுப்பும்கூட!
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-06/ls1djc6z/Untitled-2222222.jpg)
திராவிட இயக்கங்கள் தொடங்கி, கம்யூனிச இயக்கங்கள்வரை திரள்நிதி திரட்டியே அமைப்பைக் கட்டியிருக்கிறார்கள் என்பது அரசியல் அறிவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை த.வெ.கவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம். த.வெ.க-வின் கொள்கை தலைவரான பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்காத அக்கட்சி, பிரசாந்த் கிஷோர் குறித்து பேசியதற்கு துடிக்கிறார்கள். அப்படியென்றால் பி.கே-தான் அவர்களது கொள்கைத் தலைவரா எனக் கேட்கத் தோன்றுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/pcai4cq4/seeman.jpg)
த.வெ.க-வுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றிருக்கிறார் துரைமுருகன்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play