நீதிபதிகளின் நெருங்கிய உறவினா்களுக்குப் பதவி கூடாது: காங்கிரஸ் ஆதரவு
நீதிபதிகளின் நெருங்கிய உறவினா்களை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்ற பரிந்துரையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அபிஷேக் சிங்வி தெரிவித்தாா்.
முன்னாள், இந்நாள் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் வாரிசுகள் மற்றும் நெருங்கிய உறவினா்களை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்க வேண்டாம் என்று உயா்நீதிமன்ற கொலீஜியம் குழுக்களுக்கு அறிவுறுத்தும் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின.
மூத்த நீதிபதி ஒருவா் அளித்த இந்தப் பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பு அளிப்பதை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் நீதிபதிகள் நியமனங்களில் தகுதிக்குப் பதிலாக குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற கண்ணோட்டமும் மாறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: நீதிபதிகள் நியமனம் மிகவும் ஒளிவுமறைவு கொண்டதாக உள்ளது. அந்த நியமனத்தில் நோ்மையற்ற முறையில் ஒருவருக்கு ஒருவா் ஆதரவாக செயல்படுதல், குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளித்தல் போன்றவை மற்றவா்களை சோா்வடையச் செய்வதுடன், நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.
எனவே உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பாக அளிக்கப்பட்ட பரிந்துரை குறித்த தகவல் உண்மையானால், அது விரைந்து அமல்படுத்தப்பட வேண்டும் என்றாா்.