நெல்லை: அரசு வேலை வாங்கி தருவதாக 37 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைது; பின்னணி என்ன?
தேனி ஊத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் ஜேசுராஜசேகரன். இவர் 2022ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். மார்த்தாண்டம் பகுதியில் வசித்துவந்த ஜேசுராஜசேகரனுடன், அவரது மனைவி எனக் கூறிக்கொண்டு கனகதுர்கா என்ற பெண் வசித்து வந்தார். இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு அருகே லலிதா (43) என்ற பெண் ஒருவர், கணவர் மற்றும் 2 குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் மற்றும் அவருடன் வாழ்ந்த கனகதுர்கா ஆகியோர் லலிதாவின் குடும்பத்தினருடன் நட்பாகப் பழகி வந்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரனும், கனகதுர்காவும் சேர்ந்து லலிதாவின் மகன் உள்ளிட்ட 37 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "லலிதாவின் மகன் விஷால் கடந்த 2022ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்திருக்கிறார். அவர்கள் சோகத்திலிருந்த சமயத்தில் அவர்கள் வீட்டுக்குச் சென்ற கனகதுர்கா, தான் பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருவதாகவும், லலிதாவின் மகனுக்குத் திருநெல்வேலி அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். மேலும். 10 ஆசிரியர் பணியிடங்களும், 50 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் இருப்பதாகக் கூறியுள்ளார். இதை ஜேசுராஜசேகரனும் உண்மை எனச் சொல்லியுள்ளார்.
இதை நம்பி லலிதா தனது உறவினர்கள், நண்பர்களிடம் இந்த தகவலைக் கூறி 37 பேரிடமிருந்து சுமார் ஒரு கோடியே 47 லட்ச ரூபாய் வாங்கி காவல் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் மற்றும் கனகதுர்காவிடம் கொடுத்துள்ளனர். பணம் வாங்கிய பின்பு இன்ஸ்பெக்டர் மதுரைக்குப் பணியிட மாறுதலாகச் சென்றிருக்கிறார். வேலைக்குப் பணம் கொடுத்த நபர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது அழைப்பைத் துண்டித்ததுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு போலி பணி நியமன ஆணையை வீட்டிற்குத் தபால் மூலம் ஆய்வாளர் ஜேசுராஜசேகரன் அனுப்பி உள்ளார். அது போலி பணி நியமன ஆணை எனத் தெரியவந்ததால், லலிதா இதுகுறித்து ஆய்வாளரிடம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டியிருக்கிறார். இதுகுறித்து கடந்த மாதம் லலிதா எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குற்றப்பிரிவு காவல்துறைக்கு அனுப்பப்பட்டதை அடுத்து கனகதுர்கா என்ற முனியம்மா மற்றும் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் ஆகியோர்மீது 5 பிரிவுகளில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே சாத்தான்குளம் காவல ஆய்வாளராகப் பணியிலிருந்த ஜேசுராஜசேகரனை, திருநெல்வேலி ஆயுதப்படைக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி., மூர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இன்ஸெக்டர் ஜேசுராஜசேகரன் நேற்று (நவம்பர் 24) கைது செய்யப்பட்டார். விசாரணையில் கனகதுர்கா என்ற முனியம்மாவும் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரனுக்கும் மதுரையில் வைத்து பழக்கம் ஏற்பட்டதாகவும், இன்ஸ்பெக்டர் பணியிடம் மாறுதலாகிச் செல்லும்போதெல்லாம் அவருடன் கனகதுர்காவும் சென்று இருவரும் சேர்ந்து வாழ்ந்ததும் தெரியவந்தது" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...