பணத்துக்காக இரண்டாவது கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண்... பகீர் பின்னணி..!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள உப்பல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகரிகா. இவரது இரண்டாவது கணவர் ரமேஷ்.
கர்நாடகா மாநிலம் கொடகு அருகில் உள்ள காபி தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்த போது அந்த வழியாக சிவப்பு கலர் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று சென்றது தெரிய வந்தது. அந்த கார் தெலங்கானாவில் பதிவாகி இருந்தது. அந்த கார் ரமேஷ் என்பவர் பெயரில் பதிவாகி இருந்தது.
அக்காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தியதில் ரமேஷ் மனைவி நிகரிகாவின் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸார் நிகரிகாவிடம் நடத்திய விசாரணையில், நிகரிகா தனது காதலன் நிகில் என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில், நிகரிகா இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு தாயானார். அதன் பிறகு தனது கணவனை பிரிந்த பிறகு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஹரியானா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அங்குர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சிறையில் இருந்து வெளியில் வந்தபோது ரமேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார் நிகரிகா. ரமேஷிற்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். இத்திருமணத்தின் மூலம் நிகரிகாவிற்கு ரமேஷ் ஆடம்பர வாழ்க்கை கொடுத்தார். மேலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நிகரிகா தனது கணவரிடம் ரூ.8 கோடி கேட்டுள்ளார். ஆனால் அந்த அளவுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
நிகரிகாவிற்கு நிகில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து தனது காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய நிகரிகா திட்டமிட்டார். காதலன் நிகில் மற்றும் அங்குர் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்துவிட்டு அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நிகரிகா திட்டமிட்டார்.
ரமேஷை ஐதராபாத் உப்பலில் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்தனர். பின்னர் உடலை அங்கிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச்சென்று அங்குள்ள காபி தோட்டத்தில் உடலை எரித்தனர். பின்னர் அவர்கள் ஐதராபாத் வந்துவிட்டனர். ஐதராபாத்திற்கு வந்து நிகரிகா தனது கணவனை காணவில்லை என்று கூறி புகார் செய்தார்.
இது குறித்து குடகு போலீஸ் அதிகாரி அதிகாரி ராமராஜன் கூறுகையில்,'' நிகரிகா அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டார். எனவே இவ்வழக்கில் துப்பு துலக்குவது மிகவும் சவாலாக இருந்தது. உடல் எரிக்கப்பட்டு இருந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அப்பகுதியில் அதிகாலை 12 மணியில் இருந்து 2 மணிக்குள் அப்பகுதியில் கார் ஒன்று சென்றது தெரிய வந்தது. தும்குர் வரையிலான 500 கேமராக்களை ஆய்வு செய்தபிறகு தான் இதில் துப்பு துலங்கியது. நிகரிகாதான் இதில் முக்கிய குற்றவாளி என்று விசாரணையில் தெரிய வந்தது. நிகரிகா, நிகில், அங்குர் ஆகியோர் சேர்ந்து இக்கொலையை செய்துள்ளனர். அவர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து ரமேஷ் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூரு சென்றனர். அங்கிருந்து உடலுடன் குடகுவிற்கு சென்று உடலை எரித்தனர்.