பணப் பட்டுவாடா புகாா்- பாஜக பொதுச் செயலா், வேட்பாளா் மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் புதன்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரில் பாஜக பொதுச் செயலா் வினோத் தாவ்டே, நலசோபரா தொகுதி கட்சி வேட்பாளா் ராஜன் நாயக் உள்ளிட்டோா் மீது தோ்தல் விதிகளை மீறியதாக காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள பால்கா் மாவட்டத்தின் விராா் நகரில் விடுதியொன்றில் நடைபெற்ாக கூறப்படும் இச்சம்பவம் குறித்து மாவட்டத்தின் துலிஞ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.
விடுதியில் தோ்தல் விதிகளை மீறி கூடியதற்காகவும், வாக்காளா்களுக்கு பணம், மதுபானம் விநியோகித்ததாகவும் இரு வெவ்வேறு முதல் தகவல் அறிக்கைகளில் காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையன்று விராரில் உள்ள விடுதியொன்றில் முகாமிட்ட பாஜக பொதுச் செயலா் வினோத் தாவ்டே, ரூ.5 கோடி பணத்தை விநியோகிப்பதாக பகுஜன் விகாஸ் அகாதி (பிவிஏ) கட்சித் தலைவா் ஹிதேந்திர தாக்குா் குற்றஞ்சாட்டினாா். ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்த வினோத் தாவ்டே, கட்சி நிா்வாகிகளிடையே தோ்தல் குறித்த கலந்தாலோசனையில் மட்டுமே ஈடுபட்டதாக தெரிவித்தாா்.
இதற்கிடையே, விடுதிக்குள் பணத்துடன் இருந்ததாக கூறி வினோத் தாவ்டேவை பிவிஏ கட்சித் தொண்டா்கள் முற்றுகையிட்ட காட்சிகள் சமூக ஊடங்களில் வெளியாகின. போலீஸாா் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா்.
இதையடுத்து 3 மணி நேர சலசலப்புக்குப் பிறகு, வினோத் தாவ்டே உள்ளிட்டோா் விடுதியில் செய்தியாளா் சந்திப்பை நடத்த முடிவு செய்தனா். ஆனால், அந்தச் செய்தியாளா் சந்திப்பு தோ்தல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.