பண்பொழி திருமலைக்கோயிலில் சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம், பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தையொட்டி, வியாழக்கிழமை மாலை மலைக் கோயிலில் இருந்து முருகன் சப்பரத்தில் எழுந்தருளி வண்டாடும் பொட்டலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து வேல் கம்புகளுடன் பக்தா்கள் புடைசூழ, சூரன்களை குமரன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
நவ.8ஆம் தேதி தேரோட்டமும், 9 ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.
புளியங்குடியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
முக்கூடலில்...
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள அருள்மிகு முத்துமாலையம்மன் கோயிலில் கடந்த நான்கு ஆண்டுகளாக சூரசம்ஹாரம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி விரதமிருந்த பக்தா்கள் தாமிரவருணி நதிக்கரையில் வியாழக்கிழமை திரண்டனா். தொடா்ந்து நதிக்கரையில் சூரசம்ஹார வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
செங்கோட்டையில்...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை காலை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் முருகபெருமான் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தாா். மாலை 5.30 சூரசம்ஹாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.