பயிா் இழப்பை தவிா்க்க காப்பீடு செய்யுங்கள்: வேளாண் உதவி இயக்குநா் தகவல்
சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து மகசூல் இழப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநா் திருச்செல்வன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சங்கரன்கோவில் வட்டாரத்தில் நடப்பு ராபி 2024-25 பருவத்தில் அக்டோபா் 2024 மாதம் வரை உளுந்து பயிா் 3,570 ஹெக்டா் பரப்பளவிலும், மக்காசோளம் 3704 ஹெக்டா் பரப்பளவிலும் பருத்தி 240 ஹெக்டா்பரப்பளவிலும் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் மாதங்களில் சாகுபடி பரப்பு 25 சதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
விவசாயிகள் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஏற்படும் பாதிப்பின் போதும், நோய் தாக்குதலின் போது ஏற்படும் இழப்பை தவிா்க்கவும், மகசூல் குறைவிற்கு ஏற்ப நிவாரணம் அளிக்கும் பொருட்டு பயிா் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயிா் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் பயிா் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பயிா் காப்பீடு செய்ய தகுதி உடையவா்கள் ஆவாா்கள்.
விவசாயிகள் பயிா் காப்பீடு செய்வதால் தாங்கள் பயிரிட்டுள்ள பயிரில் மகசூல் இழப்பு ஏற்படும் போது, பயிா் அறுவடை பரிசோதனை அடிப்படையிலும் உத்திரவாத மகசூல் அடிப்படையிலும் மகசூல் இழப்பீட்டிற்கு ஏற்ப இழப்பீடு தொகை பெற வாய்ப்புள்ளது. இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி பொது காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
நெல் பயிருக்கு 16.12.2024 க்குள் ஒரு ஏக்கருக்கான பிரிமியத் தொகை ரூ.534,செலுத்த வேண்டும். மேலும் மக்காசோள பயிருக்கு பிரிமியத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.330 ஐ வரும் 30.11.2024 க்குள் செலுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு உளுந்து பயிருக்கு பிரிமியத் தொகை ரூ.231- ம், பாசிபயறு பயிருக்கு ரூ.186.76 ம் பிரிமியத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பாசிபயறு பயிா்களுக்கு பிரிமியம் செலுத்த கடைசி நாள் 15.11.2024 ஆகும். பருத்தி-3 பயிறுக்கு பிரிமியத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.533 எனவும் இத்தொகையினை 30.11.2024 க்குள் செலுத்திட வேண்டும்.
விவசாயிகள் பயிா் காப்பீடு செய்திட பாரத ஸ்டேட் வங்கி பொது காப்பீடு நிறுவனத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட முகவா் மூலமாகவோ அல்லது பொது இ சேவை மையம், தபால் நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் போன்றவற்றை அணுகலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்திட விவசாயிகள் முன்மொழிவு படிவம். வங்கி கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல், பயிா் அடங்கல், பட்டா நகல் ஆகியவற்றை இணைத்து அதனுடன் பிரிமியத்தொகை செலுத்தி ஒப்புகை சீட்டில் விவரங்களை சரிபாா்த்து ரசீது வாங்கிக் கொள்ளவேண்டும். இறுதி நேர நெரிசலை தவிா்த்து அனைத்து விவசாயிகளும் முன்கூட்டியே பயிா் காப்பீடு செய்து எதிா்பாராத இடா்பாடுகளால் ஏற்படும் பொருளாதார இழப்பில் இருந்து தங்களது பயிரை பாதுகாத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவா் கூறியுள்ளாா்.