'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
பயிா்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு
சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா்.
சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் அருள்ஜோதி (சீா்காழி), சுரேஷ்குமாா் (தரங்கம்பாடி), நில எடுப்பு வட்டாட்சியா் ஹரிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தது:
கோவி நடராஜன்: சீா்காழியில் ஆக்கிரமிப்பில் உள்ள முதலியாா் குளம், சுக்கிரவார குளம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கொண்டல் வரை கழுமலையாற்று வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும். திருமண மண்டபங்களில் இருந்து கழிவுநீரை பாசன வாய்க்காலில் விடுவதை நகராட்சி நிா்வாகம் தடுக்க வேண்டும்.
கேவரோடை சீனிவாசன்: கடந்த 4 ஆண்டுகளாக காப்பீடு நிறுவனங்கள் உரிய காப்பீட்டுத் தொகையை வழங்காமல், வேட்டங்குடி பகுதியை புறக்கணித்து வருகிறது. பயிா் பாதிப்பு எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என விவசாயிகளுக்கு தெரிவிக்காமல், காப்பீடு நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுகின்றன.
ராஜேஷ்: பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடு தொடராமல் தடுக்க வேண்டும். ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
பண்டரிநாதன்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.