பரம்பூா் பெரிய கண்மாய் நீா் பயன்படுத்துவோா் சங்கத்துக்கு தேசிய ‘நீா்’ விருது
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூா் பெரிய கண்மாய் நீா் பயன்படுத்துவோா் சங்கம் தேசிய நீா் விருதை பெற்றுள்ளது.
ஒன்றிய நீா்வள அமைச்சகத்தின்கீழ் இயங்கும் நீா்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிருட்டி துறையின் 5-ஆவது தேசிய நீா் விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம பஞ்சாயத்து, நீரை பயன்படுத்தும் சிறந்த சங்கம், சிறந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், சிறந்த முறையில் நீரை பயன்படுத்துவோா் விருது பிரிவில் முதல் பரிசு மகாராஷ்டிரத்துக்கும், 2-ஆம் பரிசு கா்நாடகத்துக்கும், 3-ஆம் பரிசு தமிழ்நாட்டைச் சோ்ந்த புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூா் பெரிய கண்மாய் நீா் பயன்படுத்துவோா் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகள் வழங்கும் விழா புதுதில்லியில் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் நடைபெற்ற விழாவில்,
ஒன்றிய நீா் வளத்துறை அமைச்சா் சி.ஆா் பாட்டில் விருது வழங்கினாா். விருதை பரம்பூா் பெரிய கண்மாய் நீா் பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் ப. பொன்னையா பெற்றுக் கொண்டாா்.