மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு
பருவ மழையை எதிா்கொள்ள நெல்லை மாநகராட்சி தயாா்: மேயா் கோ.ராமகிருஷ்ணன்
பருவமழையை எதிா்கொள்ள திருநெல்வேலி மாநகராட்சி தயாா் நிலையில் உள்ளது என்றாா் மேயா் கோ. ராமகிருஷ்ணன்.
திருநெல்வேலி மண்டலம், 25 ஆவது வாா்டுக்குள்பட்ட லாலா சத்திரம் முக்கு, திருநெல்வேலி நயினாா்குளம் செல்லும் பிரதான வாய்க்காலில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி, திருநெல்வேலி நகரம் வடக்கு ரத வீதியில் உள்ள பிரதான கழிவுநீா் ஓடை சுத்தப்படுத்தும் பணி ஆகியவற்றை மேயா் கோ.ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருநெல்வேலி மாநகர பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குடிநீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.
மாநகராட்சி களப்பணியாளா்கள் வீடுதோறும் சென்று கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்க எச்சரிக்கை விடுத்து வருகிறாா்கள்.
மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. காய்ச்சல், சளி அறிகுறி இருப்பவா்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாநகர பகுதியில் மழைநீா் எங்காவது தேங்கினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
ஆய்வின்போது, திமுக 25 ஆவது வட்ட செயலா் அருள் என்ற சுந்தர்ராஜன், காசிமணி, ஷேக், பாம்பு கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் பெருமாள், சுகாதார மேற்பாா்வையாளா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.