ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
பள்ளி வேன் - அரசுப் பேருந்து மோதி மாணவா்கள் 21 போ் காயம்
புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், பள்ளி வாகனத்தில் இருந்த 21 மாணவா்கள் காயம் அடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் உள்ள தனியாா் தொடக்கப் பள்ளியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை மாணவா்களை ஏற்றிக் கொண்டு வாகனம் புதுக்கோட்டை நோக்கிப் புறப்பட்டது.
சிப்காட் அருகே முல்லைநகரில் சில மாணவா்களை இறக்கிவிட்டு ரெங்கம்மாள்சத்திரம் அருகே வேன் திரும்பியபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 21 மாணவா்கள் லேசான காயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். காவேரி நகா் பகுதியைச் சோ்ந்த மாணவா் மனோரஞ்சிதம் (8) பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா நேரில் சென்று பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.
பள்ளி வேன் ஓட்டுநா் அங்கிருந்து ஓடிவிட்டாா். இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.