பழனிசெட்டிபட்டியில் மேல்நிலை நடைபாதை அமைப்பு
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தேனி-கம்பம் நெடுஞ்சாலையின் குறுக்கே மேல் நிலை இரும்பு நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேனி-கம்பம் நெடுஞ்சாலையில் பழனிசெட்டிபட்டி வழியாக அதிகளவில் வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது. தேனியிலிருந்து வீரபாண்டி வரை புறவழிச் சாலை திறக்கப்பட்ட பின்னரும், தேனி-பழனிசெட்டிபட்டி இடையே வாகனப் போக்குவரத்து குறையவில்லை. இதனால், சாலையைக் கடக்கும் வாகனங்கள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்க உள்ளதால், இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழனிசெட்டிபட்டியில் தேனி-கம்பம் சாலையில் பழனியப்பா நினைவு நடுநிலைப் பள்ளி அருகே நெடுஞ்சாலைத் துறை சாா்பில், மேல்நிலை இரும்பு நடை பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகள், பாதசாரிகள் சிரமமின்றி சாலையைக் கடப்பதற்காக இந்த மேல்நிலை இரும்பு நடைபாதை அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் கூறினா்.
மேல்நிலை இரும்பு நடை பாதை அமைக்கும் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை தேனியிலிருந்து போடி, கம்பம் பகுதிகளுக்குச் சென்று வரும் அனைத்து வாகனங்கள், பேருந்துகள் புறவழிச் சாலை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.