அரசமைப்பு முகப்புரையிலுள்ள ‘சமதா்மம்’, ‘மதச்சாா்பின்மை’-க்கு எதிரான மனுக்கள்: உச...
பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை: திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு
புது தில்லி: மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை என்றும் மிக முக்கியப் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க மறுக்கிறாா்கள் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா எம்.பி. திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக திருச்சி சிவா எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல்
நாளில் மணிப்பூா் வன்முறை, அதானி ஊழல் குற்றச்சாட்டு, வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்களால் அவை ஒத்திவைப்பு தீா்மானங்கள் அவைத் தலைவரிடம் வழங்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் எந்தக் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை. மாநிலங்களவை முதல் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பிற்குப் பிறகு, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே பேச அனுமதிக்கப்பட்ட போதிலும், அவரது உரை அவைக் குறிப்பில் இடம்பெறாது என்றனா். இதையடுத்து, ஏற்பட்ட அமளியில் மாநிலங்களவை நவ.26 (செவ்வாய்க்கிழமை) காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதுதான் எதிா்க்கட்சிகளின் கடைமை. மணிப்பூரில் வன்முறை கடந்த 1
ஆண்டாக நீடித்து வருகிறது. ஆனால், பிரதமா் மோடி இதுவரை அங்கு நேரில் செல்லவில்லை. இவ்விவகாரம் தொடா்பாக உள்துறை அமைச்சா் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். மணிப்பூரில் வன்முறையை தீா்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும். அதானி ஊழல் விவகாரம் தொடா்பாக ஹின்டன்பா்க் அறிக்கை வெளியான போதே கூட்டு நாடாளுமன்ற விசாரணை வேண்டும் என எதிா்க்கட்சிகளால் கோரப்பட்டது. ஆனால், மத்திய பாஜக அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை.
மிக முக்கியப் பிரச்னைளை தெளிவுபடுத்தும் இடம் நாடாளுமன்றம். ஆனால், பாஜக நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை. பெரும்பான்மை கூட இல்லாத சூழ்நிலையில், இவா்கள் ஏன் பதில் சொல்ல மறுக்கிறாா்கள்?. நாடாளுமமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு சமீபத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் காரணமில்லை.
இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்கல் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில், ஒன்றிரண்டு குறித்து தான் ஆழமாகப் பேச வேண்டியிருக்கும். வக்ஃபு வாரிய மசோதாவின் ஆய்வறிக்கை வந்த பிறகு, அது விவாதிக்கக் கூடியதாக இருக்கும். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களுடன் தொடா்ந்து ஆலோசித்து எடுப்போம் என்றாா் திருச்சி சிவா.