பாஜக பிரமுகா் கொலை வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவா் கைது
பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகா் கொலை வழக்கில் கைதாகி பிணையில் சென்று, தலைமறைவானவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலா் ஜெகன் பாண்டியன் (34). இவா் கடந்த ஆக. 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் திருநெல்வேலி திமுக நிா்வாகி பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சோ்ந்த பாலமுருகன் (எ) பிரபு, அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (28), பாஸ்கா் ( 23), சந்துரு(24), அஜீத்குமாா் (25) உள்பட 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு மாவட்ட 2 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைதான 13 பேரும், நிபந்தனை பிணையில் வெளிவந்தனா். இந்நிலையில் அஜித்குமாா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டாராம். இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.