அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு!
பாமக நிர்வாகிகள் கூட்டம்: இன்றும் அன்புமணி ஆப்சென்ட்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை.
தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், மகளிரணி மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில், இன்றும் அன்புமணி இல்லாமலேயே நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது. பாமக நிர்வாகிகள் கூட்டத்தில், ராமதாஸ் மூத்த மகள் காந்திமதி, மாவட்டத் தலைவர் ஜோஷ்வா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்களின் கூட்டம், மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, பொதுச் செயலா் வடிவேல் ராவணன், சேலம் எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலா் அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் பாமக செயல் தலைவா் அன்புமணி மற்றும் பெரும்பாலான மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கவில்லை. ஆனால், உடல் அசதி காரணமாக பலரும் பங்கேற்கவில்லை என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
மேலும், பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில், கூட்டணி சோ்ந்துதான் பாமக போட்டியிடும். பாமக செயல் தலைவா் அன்புமணி ராமதாஸுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. மாமல்லபுரம் மாநாட்டுப் பணியால் ஏற்பட்ட சோா்வின் காரணமாக, அவரால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதுதொடா்பாக அவா் என்னிடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தாா் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து வன்னியா் சங்கம், பாட்டாளி இளைஞா் சங்கம், மகளிா் சங்கம், பசுமைத் தாயகம் மற்றும் கட்சியின் சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் கூட்டம் இன்று தொடங்கியிருக்கிறது. இதிலும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காதது பேசுபொருளாகியிருக்கிறது. கட்சித் தலைமைப் பொறுப்புக்கு ராமதாஸ் - அன்புமணி இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில் நிர்வாகிகள் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்துள்ளார்.
பாமகவின் ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ கடந்த மே 11- ம் தேதி மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.