குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!
உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார்.
பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குவதாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடந்து, காவலர்கள் மனோஜ் (வயது 38) மற்றும் கங்கா ராம் ஆகியோர் சம்பவயிடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது, அந்தக் குற்றவாளிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தங்களது காரில் தப்ப முயன்றுள்ளனர்.
இந்நிலையில், தப்பியோடிய அவர்களை காவல் துறையினர் தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளனர். சலாமாபாத் - பாரைரா அருகில் வந்தபோது குற்றவாளிகளின் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து மின்கம்பத்தின் மீது மோதி அருகிலுள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளது.
இதனால், அந்த மின்கம்பம் உடைந்து கால்வாய் நீரில் மின்சாரம் கசித்துள்ளது. ஆனால், இதை அறியாமல், குற்றவாளிகளைப் பிடிக்க காவலர்கள் இருவரும் அந்தக் கால்வாயினுள் குதித்துள்ளனர்.
அப்போது, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கு விரைந்த காவல் துறையினர் உடனடியாக மின்சாரத்தைத் துண்டித்து, அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு, அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மனோஜ் ஏற்கனவே பலியானதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், மற்றொரு காவலர் கங்கா ராம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், தப்பியோடிய குற்றவாளிகளில் விபத்தினால் படுகாயமடைந்த நீரஜ் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தப்பியோடிய அவரது கூட்டாளிகளைப் பிடிக்க அம்மாநில காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!