RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?
தெலங்கானாவில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது!
தெலங்கானா மாநிலத்தில் இஸ்ரேல் கொடியை அகற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியை முன்னிட்டு, ஹைதரபாத்திலுள்ள அம்மாநில அரசின் தலைமைச் செயலகம் அருகில் இஸ்ரேல் நாட்டின் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் அந்தக் கொடி இரண்டு முறை அடையாளம் தெரியாத நபர்களால் அகற்றப்பட்டதாக காவல் நிலையத்தில் இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மே 12 ஆம் தேதியன்று, கொடி ஏற்றப்பட்டிருந்த இடத்திலிருந்து அது மாயமானதினால், பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அங்கு மற்றொரு கொடி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 14 ஆம் தேதியன்று, அந்தக் கொடி மீண்டும் மாயமானதினால், மே 16 ஆம் தேதி மற்றொரு புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அப்பகுதியில் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்த ஜாகீர் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில், அந்தக் கொடியை அகற்றியதை தனது சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கான காரணம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்துடன், அவர் மீது திருட்டு மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மே 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை காவல் துறையினர் தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:உத்தரகண்ட்: புனித யாத்திரைத் தலங்களை நிர்வகிக்க புதிய குழு! அமைச்சரவை ஒப்புதல்!