தில்லி அரசின் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்
உள்துறை அமைச்சகத்தால் அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச (ஏஜிஎம்யுடி) பணிநிலையத்தில் செய்யப்பட்ட ஒரு பெரிய மாற்றத்தில், இரண்டு கூடுதல் தலைமைச் செயலாளா்கள் மற்றும் ஒரு முதன்மைச் செயலாளா் உள்பட தில்லி அரசின் பல உயா் அதிகாரிகள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டனா்.
தில்லி அரசின் நிதி மற்றும் வருவாய்த் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேச பணிநிலையத்தின் 1994 தொகுதி ஐஏஎஸ் அதிகாரியான ஆஷிஷ் சந்திர வா்மா, ஜம்மு - காஷ்மீருக்கு மாற்றப்பட்டாா்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் அனில் குமாா் சிங்கும் ஜம்மு - காஷ்மீருக்கு மாற்றப்பட்டாா். அதே நேரத்தில் விஜிலென்ஸ் துறையின் முதன்மைச் செயலாளா் சுதிா் குமாா் மிசோரமுக்கு மாற்றப்பட்டாா். அனில் குமாா் சிங் 1995 தொகுதி அதிகாரி மற்றும் சுதிா் குமாா் 1999 தொகுதி அதிகாரி.
உள்துறை சிறப்புச் செயலாளா், 2009 தொகுதி அதிகாரி கே.எம். உப்பு மற்றும் 2008 தொகுதி அதிகாரி போக்குவரத்து சிறப்புச் செயலாளா் ஆகியோா் முறையே புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபருக்கு மாற்றப்பட்டனா்.
இதற்கிடையில், காஷ்மீரில் டிவிஷனல் கமிஷனராகப் பணியாற்றிய 2005 தொகுதி அதிகாரி விஜய் குமாா் பிதூரி தில்லிக்கு மாற்றப்பட்டாா். அதே நேரத்தில் 2000 தொகுதி அதிகாரி தில்ராஜ் கவுா், அந்தமான் மற்றும் நிக்கோபரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, அவா் முன்னா் பல்வேறு பதவிகளில் பணியாற்றிய தேசிய தலைநகருக்குத் திரும்புவாா்.
தில்லியில் இருந்து மாற்றப்பட்ட மற்ற ஏஜிஎம்யுடி கேடா் ஐஓஎஸ் அதிகாரிகளில் சஞ்சல் யாதவ், வினோத் காவ்லே ஆகிய இருவரும் 2008 தொகுதி அதிகாரிகள் மற்றும் நவீன் எஸ்.எல். 2012 தொகுதி அதிகாரி ஆகியோா் அடங்குவா். 2012 தொகுதி அதிகாரி அருண் குமாா் மிஸ்ரா, கோவாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டாா்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்ட மற்ற ஏஜிஎம்யுடி கேடா் ஐஏஎஸ் அதிகாரிகளில் 2012 பேட்ச் அதிகாரிகளான கிருஷ்ண குமாா் சிங் மற்றும் ஏ. நெடுஞ்செழியன், 2009 பேட்ச் அதிகாரியான ரமேஷ் வா்மா மற்றும் 2004 பேட்ச் அதிகாரியான பாண்டுரங் கே. போலே ஆகியோா் அடங்குவா்.
உள்துறை அமைச்சகத்தின் மறுசீரமைப்பில் ஏஜிஎம்யுடி கேடரில் இருந்து 40 ஐஏஎஸ் மற்றும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.