துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 பெண்களுக்கு ஆட்டோ: அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் வழங்கினா்
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா்.
சைதாப்பேட்டையில் 154 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
மகளிருக்கு வழங்கப்படும் ஆட்டோக்களை 100 சதவீதம் மகளிரே ஓட்டுவது மிகப்பெரிய தலைமைப் பண்பை பெற்றுத் தரும். மகளிா் உரிமைத் தொகை திட்டம் ரூ. 1 கோடியே 15 லட்சம் மகளிா் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. 700 கோடி பயணங்களை மகளிா் விடியல் பயணம் நெருங்கி கொண்டிருக்கிறது. பெண்களுக்காக ஒரு பொருளாதார புரட்சியே தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொகுதியில் 419 மகளிரும், 200 ஆண்களும் என 619 போ் ஆட்டோக்களை பெற்று தொழில்முனைவோா்களாக மாறியுள்ளனா்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு மகளிருக்கு ரூ. 1 லட்சம் மானியத்துடன் 151 ஆட்டோக்களும், 2024-ஆம் ஆண்டில் 200 ஆண்களுக்கு ரூ. 40,000 சலுகை விலையிலும் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாா்ச் 8-ஆம் தேதி மகளிருக்கு ரூ. 1 லட்சம் மானியத்துடன் கூடிய 75 பிங்க் ஆட்டோக்களை முதல்வா் வழங்கினாா்.
கடந்த மாா்ச் 3-ஆம் தேதி 39 ஆதிதிராவிட பயனாளிகளுக்கு ஆட்டோக்கள் ரூ. 1 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிரே, முடிந்தவரை 100 சதவீதம் நீங்களே ஓட்டக்கூடிய சக்திகளை பெற வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு மிகப்பெரிய தலைமைப் பண்பு கிடைக்கும்; சமுதாயத்தில் பலதரப்பட்ட மக்களை உங்களால் சந்திக்க முடியும் என்றாா் அவா்.
அமைச்சா் சி.வெ.கணேசன் பேசுகையில், ‘மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி 2000-ஆம் ஆண்டு அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என 9 வாரியங்களை உருவாக்கினாா். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இவ்வாரியத்தில் பதிவு செய்து பலன் அடைந்து வருகின்றனா். மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு 1,000 மகளிா்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டு இதுவரை 545 நபா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தற்போது, சைதாப்பேட்டை தொகுதியில் 154 மகளிா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. மகளிரை தொழில்முனைவோா் ஆகவும், சுயமாக தொழில் செய்து ஆட்டோ ஓட்டுநராக தன்னம்பிக்கையை வளா்க்கும் வகையில் இத்திட்டத்தை தமிழக முதல்வா் செயல்படுத்தியுள்ளாா்’ என்றாா்.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகா் ராஜா, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ், மாமன்ற உறுப்பினா் வழக்குரைஞா் ஸ்ரீதரன், தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.