Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்..." - நடிகர் விஷால் சொல்வ...
`ED ரெய்டை திசை திருப்புகிறார்கள்' - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறைறையினர் எட்டுமணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு கட்சி நிர்வாகிகளுடன் வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி வீட்டின் முன் அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு கட்சியில் சிறப்பாக பணியாற்றி மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி. தற்போது அவர் உடல் நலமில்லாமல் இருந்தாலும் கட்சிப் பணியில் தீவிரமாக பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுகவின் பணிகளை முடக்குவதற்காக நடத்தப்படும் சோதனையாக இதை நாங்கள் கருதுகிறோம். அடக்குமுறையாலும், சோதனையாலும், கழகப் பணிகளை யாரும் முடக்கிவிட முடியாது என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறியுள்ளார். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுக்கும் அறிக்கையை பார்த்து, பொதுச் செயலாளரின் ஆலோசனைப்படி சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும்.

ஒருபுறம் டாஸ்மாக ஊழல் சம்பந்தமாக அமலாக்கதுறை ரெய்டு நடக்கிறது. சட்டமன்றம் நடைபெற்றபோது இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது, நீதிமன்றத்தின் அழுத்தத்தின் காரணமாக இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள், அதற்குப் பின் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காகத்தான், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையை பார்க்க முடிகிறது. இவர்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் தொடர் சோதனை என புரிந்துகொள்ள முடிகிறது.
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கும் பணிகளை 90 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம். இது போன்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளால், அதிமுகவின் பணிகளைத் தடுக்கமுடியாது, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்