'இதை அரசியலாகப் பார்க்கவில்லை' வெளிநாடு செல்லும் குழுவில் இடம்பெற்றது பற்றி சசிதரூர் எம்.பி கருத்து
7 எம்.பி-க்கள் அடங்கிய குழு:
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அடுத்த வாரம் அனைத்துக்கட்சி குழு புறப்படுகிறது. அதற்காக அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஏழு எம்.பி-க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், பா.ஜ.க-வைச் சேர்ந்த ரவி சங்கர் பிரசாத், ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஜா, பா.ஜ.க-வைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா, தி.மு.க-வைச் சேர்ஞ கனிமொழி கருணாநிதி, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஶ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொடுத்த லிஸ்டைப் புறக்கணித்துவிட்டு சசிதரூரை மத்திய அரவு நியமித்துள்ளதாக விவாதம் எழுந்திருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் தலைவரையும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குழுக்களுக்கு 4 எம்.பி.க்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு நான்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, கௌரவ் கோகோய், டாக்டர் சையத் நசீர் உசேன், ராஜா பிரார் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன என தெரிவித்திருந்தார். மேலும், அனைத்துக் கட்சி குழு விஷயத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாகவும் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து சசிதரூர் எம்.பி கூறுகையில், "மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு என்னை அழைத்துப் பேசினார். இந்த நாட்டிற்கு எனது சேவை தேவைப்படுவதாகச் சொன்னார். உங்கள் அனுபவமும், உங்களது திறமையும் எங்களுக்குத் தேவைப்படுகிறது எனவும் நீங்கள் சில ஆண்டுகளாகப் பேசும் கருத்துகள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன. அரசு உங்களது இந்தச் சேவையை விரும்புகிறது, எதிர்பார்க்கிறது" என கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அதை நான் மிகவும் பெருமையாகக் கருதினேன். தேச சேவைக்காக என்னை அழைத்தார்கள். அந்தப் பணியை செய்யத் தயாராக இருப்பதாக நான் உறுதியளித்தேன். அவர்கள் எனது பெயரை அறிவித்துள்ளார்கள்.
அதேசமயம் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான சில பேச்சுக்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை. இதுபற்றி விரிவாக நான் பேச விரும்பவில்லை. அரசு என்னை அழைத்துப்பேசியதாக நான் கட்சி தலைமைக்குத் தெரிவித்திருந்தேன். நம் நாட்டுக்காக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அரசு அழைக்கும்போது அதைச் செய்வது நமது கடமை என்றே கருதுகிறேன்.

88 மணி நேரம் நடந்த போரை நாம் கண் முன்னே பார்த்துள்ளோம். அந்தப் போர் முடிந்த பிறகு நம் நாட்டின் நிலைப்பாடு என்ன, நம்மைப் பற்றி உலகம் என்ன கூறுகிறது என்பது குறித்து நாம் அனைவரும் பதில்சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் நான் இதில் இறங்கியுள்ளேன். இதை நான் அரசியலாகப் பார்க்கவில்லை. நாம் அனைவரும் பாரதியர்கள். பாரதத்திற்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, அரசு பாரதிய குடிமகனிடம் ஒரு விஷயம் கேட்கும்போது நான் வேறு என்ன பதில்சொல்ல முடியும். இது நாங்கள் கொடுத்த பெயர் பட்டியல் அல்ல என காங்கிரஸ் கட்சி தலைமை கூறுவது பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் இதுபற்றி நீங்கள் அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
இது என்னை அவமதிக்கும் செயலா? என நீங்கள் கேட்கிறீர்கள். யாரும் என்னை அவ்வளவு எளிதில் அவமானப்படுத்திவிட முடியாது. எனக்கென சுய கௌரவம் உண்டு. தேவையற்ற விவாதத்தில் நான் தலையிட விரும்பவில்லை. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் நடந்தபோது மன்மோகன் சிங் அரசு அரசும் எம்.பி-க்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியது எனக்கு நினைவிருக்கிறது. அது நல்ல விஷயம். நம் நாட்டில் மீதான தாக்கு நடந்தபோது நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டியதும், ஒரே குரலில் பேசவேண்டியதும் பாரதத்திற்கு நல்லது என்பது என் நம்பிக்கை. அது முன்பும் இருந்தது எதிர்காலத்தில் இருக்கும் என்பதுதான் என் நம்பிக்கை" என்றார்.