`டயர் வெடித்து கட்டுபாட்டை இழந்த வாகனம்' சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்ததில் 5 பேர் பலியான பரிதாபம்
கோவை மாவட்டம், சங்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர், தன் மனைவி வசந்தா மற்றும் உறவினர்களான கோயில் பிச்சை அவரின் மனைவி லெற்றியா கிருபா, மோசஸின் மகன் கெர்சோம், அவரின் மனைவி சைனி கிருபா, கெர்சோமின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஸ்டாலின், ரவி கெர்சோன் மகள் ஜெரினியா எஸ்தர் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள வெள்ளாளன்விளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ள நேற்று (17-ம் தேதி) காலை கோவையில் இருந்து காலை கிளம்பினர்.

காரை மோசஸ் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு நெல்லை மாவட்டம் சிந்தாமணியில் இருந்து பேய்க்குளம் வழியாக வெள்ளாளன்விளைக்கு வந்து கொண்டிருந்தனர்.
சாத்தான்குளம் அருகிலுள்ள மீரான்குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால் வேன் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடியதில் சாலையோரம் தடுப்புகள் ஏதும் இல்லாததால் தரைநிலை கிணற்றுக்குள் பாய்ந்தது. இந்தக் கிணற்றில் 50 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால் வாகனம் கிணற்றுக்குள் மூழ்கியது.

சத்தம் கேட்டு திரண்ட உள்ளூர் இளைஞர்கள் கிணற்றுக்குள் குதித்து வேனில் இருந்த கெர்சோம், சைனி கிருபா, ஜெரினியா ஆகிய மூவரையும் லேசான காயத்துடன் மீட்டனர். மற்ற 5 பேரும் தண்ணீரில் மூழ்கினர். சாத்தான்குளம் மற்றும் நாங்குநேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், முத்துக்குளி வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
கிணற்றில் பாய்ந்த காரினை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் பலகட்டமாக முயன்றனர். 4 முறை கயிறு கட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் இழுத்தபோதிலும் கொக்கி வளைந்து மீட்புப்பணி தடைபட்டது. ஸ்கூபா நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் சேற்றில் காரின் முன்பகுதி சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ராட்சத கிரேன் மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டது.

ஆனால், ஒன்றரை வயது குழந்தையின் உடல் கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் மீட்புப்பணி துரிதப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலய பிரதிஷ்டை திருவிழாவிற்கு வந்த நிலையில் காருடன் கிணற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.