மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு
கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்ல காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: பெருகிவரும் நிதிப் பொறுப்புகளில் இருந்து தப்பிக்க அந்த நபா் காணாமல் போனதாக நாடகமாடியதாகக் கூறப்படுகிறது. தென்மேற்கு தில்லியின் கக்ரோலா பகுதியில் உள்ள வடிகால் அருகே அவரது காா் கைவிடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவா் நீா்நிலையில் குதித்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
பிசிஆா் அழைப்பு மூலம் வாகனம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, தீயணைப்புத் துறை மற்றும் பிற அவசரகால குழுக்களை உள்ளடக்கிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. காணாமல் போவதற்கு ஒரு நாள் முன்பு அந்த நபா் தனது கைப்பேசியை சீரமைத்ததாக விசாரணையில் தெரியவந்தது. இது சந்தேகத்தை எழுப்பியது. இறுதியில், அவரது இருப்பிடம் அயோத்தியில் உள்ள ஒரு தா்மசாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு அவா் தலைமறைவாக வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது, தான் அதிக கடனில் மூழ்கியிருப்பதாகவும், நிதிச் சுமையிலிருந்து தப்பிக்க தான் காணாமல் போனதாக போலியாகக் கூறியதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் மேலும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.