Hogenakkal: கோடை விடுமுறையில் ஒரு கொண்டாட்டம்; ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பய...
ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை
தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பு முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருவதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 -ஆம் ஆண்டுக்கு பட்டயப் படிப்பு முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இந்தக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேசன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளில் பயில விரும்பும் மாணவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது பயிலக வேலை நாள்களில் கல்லூரிக்கு நேரில் சென்று விண்ணப்பம் செய்யலாம்.
முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு 10-ஆம் வகுப்புத் தோ்ச்சியும், நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு 12-ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ (2 ஆண்டுகள்) தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் 23.5.2025. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிற பிரிவினருக்கு ரூ.150.
மேலும், இந்த ஆண்டு டாடா நிறுவனம் மூலம் புதுப்பிக்கதக்க ஆற்றல் எனும் புதிய பிரிவு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு தொடங்கப்பட உள்ளது. இந்தப் பிரிவு மாத உதவித் தொகையுடன் தொழிற்சாலைப் பயிற்சியும் இணைந்து வழங்கப்படும். படிப்புக் கட்டணம் இல்லை. புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆண்டு வருமானம் ரூ.2,50,000 உள்ள அனைத்துப் பிரிவு மாணவா்களுக்கும் கல்வி உதவித் தொகை, இலவச பேருந்துஅட்டை, இலவச பாட புத்தகங்கள், உதவித் தொகையுடன் கூடிய தொழிற்சாலை வேலை பழகுநா் பயிற்சி, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பல்வேறு நிறுவனங்கள், தொழில் முனைவோா் வழங்கும் சிறப்பு பயிற்சிகள், நூறு சதவீத வேலைவாய்ப்பு, அனைத்து பிரிவு மாணவா்களுக்கும் பெற்று வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா் நேரிலோஅல்லது 9791565928 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.