உச்சநீதிமன்றம் - குடியரசுத் தலைவர் விவகாரம்: 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் க...
விராட் கோலிக்கு பாரத ரத்னா? `சின்ன தல’ கோரிக்கை!
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் அறிவித்த நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சனிக்கிழமையில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா கூறியதாவது, இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியின் பங்களிப்புக்கு, உரிய அங்கீகாரத்துடன் அவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்; விருதுக்கு அவர் தகுதியானவரே என்று தெரிவித்தார்.
இதுவரையில், பாரத ரத்னா விருதைப் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஓராண்டு கழித்து, 2014-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பாரத ரத்னா விருதைப் பெற்றார். தற்போது, விராட் கோலிக்கும் பாரத ரத்னா வழங்குமாறு சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார். விராட் கோலி, 2013-ல் அர்ஜுனா விருது, 2017-ல் பத்மஸ்ரீ விருது, 2018-ல் கேல் ரத்னா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த 36 வயதான விராட் கோலி, கடந்தாண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். கோலியின் தலைமையில், இந்திய அணி முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருந்தது.
டெஸ்ட் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்தது விராட் கோலிதான் என்ற பெருமையையும் அவர் வைத்துள்ளார். 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்களை பதிவு செய்துள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 9,230 ரன்கள் குவித்துள்ளார். விரைவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என்று இவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருப்பது விராட் கோலி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.