5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா: பூமி பூஜையுடன் தொடங்கியது!
திருச்செந்தூர்: ஜுலை 7ல் மகா கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை முகூர்த்தக் கால் நடும் விழா நடந்தது.
இதில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், தக்கார் ரா. அருள்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கோயிலில் வருகின்ற ஜுலை 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக திருப்பணி வேகமாக நடந்து வருகிறது.
கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் மூலவரான சுப்பிரமணியருக்கு திருக்கோயில் உள் பிரகாரத்திலும், சுவாமி சண்முகருக்கு கோயில் கிரி பிரகாரத்தில் ராஜகோபுரம் மேல வாசல் அருகே உள்ள இடத்திலும் யாகசாலை அமைக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகருக்கு யாகசாலைகள் அமைப்பதற்காக பூமி பூஜை மற்றும் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.
ராஜகோபுரம் மேல வாசல் அருகே யாகசாலை அமைக்கப்பட உள்ள இடத்தில் விநாயகர் பூஜைகள், புண்ணியாவாஜனம் மற்றும் பூமி பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத், திருக்கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்டோர் முகூர்த்தக் கால் நட்டினர்.
முன்னதாக அறநிலையத் துறை ஆகம வல்லுனர் குழுவைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆகம வல்லுனர் குழு செல்வம் பட்டர், திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர்கள் ரோகிணி, அஜித், வெங்கடேசன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் சு. ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிக்க: திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா!