"வீட்டுல இருந்து ஓடி வந்ததுக்குப் பிறகு என்னை வெறுத்துட்டாங்க!" - முனீஷ்காந்தின் அறியாத பக்கங்கள்!
தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தனி அடையாளங்கள் இருக்கும். அப்படி காமெடி நடிகர்களின் தனித்த அடையாளங்களைத் தனியாக லிஸ்ட் செய்யலாம்.
காமெடி நடிகர்களில் சிலர் காமெடி பக்கத்தைத் தாண்டி குணச்சித்திர கேரக்டர்களிலும் மிரட்டியிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் நடிகர் ராமதாஸ், நமக்கு பரிச்சயமான பெயரில் சொல்ல வேண்டுமென்றால்... முனீஷ்காந்த்.
சமீபத்தில் 'மாமன்' இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முனிஷ்காந்த் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அந்தக் காணொளி இணையத்தில் சூப்பர் வைரல் அடித்திருந்தது.
பிரசாந்த் பாண்டியராஜ் குறிப்பிட்ட இந்தத் தருணங்கள் பற்றிக் கேட்கவும், முனீஷ்காந்தின் ஆரம்பகால சினிமா நாட்கள் பற்றிப் பேசுவதற்கும் அவரைத் தொடர்பு கொண்டோம்.
சினிமா கனவோட சென்னைக்கு வந்துட்டேன்!
முனிஷ்காந்த் பேசுகையில், "இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் என்னைப் பற்றிப் பேசியிருந்த பேட்டியை நானும் பார்த்திருந்தேன். நான் அப்போ சினிமா, சினிமானு முழு ஈடுபாட்டோடு இருந்தேன். எங்க வீட்ல இத்தனை வருஷமாக இப்படியே இருக்கானு யோசிச்சாங்க.
அவங்க யோசிச்சதும் நான் சரினுதான் சொல்லுவேன். ஏன்னா, சுத்தி இருக்கிற எல்லோருமே கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் ஊரிலேயே இருந்துட்டா எல்லா விஷயங்களுமே மாறிடும்னு யோசிச்சேன்.
அப்போதான் வாழ்வோ, சாவோ பார்த்துக்கலாம்னு சினிமா கனவோட சென்னைக்கு வந்துட்டேன்.

ஒரு மஞ்சப்பையை மட்டுமே தூக்கிட்டு சென்னை வந்துட்டேன். அப்போ சென்னைல எனக்கு ரூம்னு எதுவும் கிடையாது. எனக்கு அந்த நேரத்துல இங்க பெயின்ட் அடிக்கிற வேலை இருந்தது.
பிரசாந்த் கூப்பிட்டதும் அப்படியே நான் டப்பிங்கிற்கு போயிட்டேன். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி, குறும்படங்கள் அதிகமாக பிரபலமான சமயத்துல பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்த 'தலைக்கு பத்து லட்சம்' அப்படிங்கிற குறும்படம்தான் எனக்கு சிறந்த நடிகருக்கான விருதை வாங்கித் தந்தது.
நான் வீட்டுல இருந்து வந்ததுக்குப் பிறகு எல்லோரும் என்மேல வெறுப்பாகிட்டாங்க. சொல்லப்போனால், எங்க வீட்டுல நான்தான் முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கச் சொன்னேன். அப்போ எங்க அம்மா ஒரு நேர்மையான பதிலைக் கொடுத்தாங்க. அவங்க, 'உன்னையே பார்த்துக்க முடியல.
இன்னொரு பெண்ணோட வாழ்க்கையை கெடுக்கச் சொல்றீயா? முதல்ல நல்ல நிலைமைக்கு வா'னு சொன்னாங்க. நான் சென்னைக்கு வந்ததும் சர்வைவல் கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது.
அப்போ கேட்டரிங் வேலைகள் பார்ப்பேன், கார் கழுவியிருக்கேன், கோயம்பேடுல மூட்டை தூக்கியிருக்கேன்.

இந்த வேலைகளை கவனிக்கும்போது நமக்கு இடையில 10 நாள் ஷூட் வரும்போது போயிடலாம். ஆனால், மற்ற வேலைகள்ல அதுக்கு முழுமையாக இருந்தாகணும்.
அதுனால அன்றாடம் கிடைக்கிற வேலைகளை நான் கவனிச்சுக்கிட்டேன்," என மெல்ல சிரித்தவர், "எனக்கு ஊர்ல படங்கள் பார்க்கும்போது நடிகர்களுக்கு கைதட்டுவாங்க.
நானுமே கைதட்டியிருக்கேன். அந்தக் கைதட்டல்தான் எனக்கு சினிமா மேல காதல் வர்றதுக்கு முக்கியக் காரணம். நானும் அதே மாதிரி கைதட்டல் வாங்கணும்னு சென்னைக்கு வந்தேன். ஆனால், அந்த கைதட்டல் வாங்கிறது எவ்வளவு கஷ்டம்னு அதுக்குப் பிறகுதான் புரிஞ்சுக்கிட்டேன்.
அந்த வேளையிலதான் எனக்கு சினிமா மீதான காதல் இன்னும் தீவிரமாச்சு. ஆனால், எனக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது.
போட்டோ கொடுக்கிறதுக்கே தினமும் 100 ரூபாய் வேணும்!
அப்புகுட்டி, சூரி எல்லாமே எனக்கு அப்போதே பழக்கம். அவங்க மேல வரும்போது நாமும் மேல வருவோம்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை பிறந்தது. அப்போலாம், சினிமா ஆசையோட தினமும் 10 புரொடக்ஷன் கம்பெனிகள்ல ஏறி இறங்குவோம். அப்போ, அங்கலாம் போட்டோ கொடுக்கணும். இந்த மாதிரி போட்டோ கொடுக்கிறதுக்கே தினமும் 100 ரூபாய் வேணும்.
இப்படியான தேவைகளுக்காகவே நான் மற்ற வேலைகளையும் பார்த்தேன். பிரசாந்த் பாண்டியராஜ் என்னுடைய டப்பிங் பற்றி பேசியிருந்தார்ல? அதே டப்பிங்தான் எனக்கு 'முண்டாசுப்பட்டி' படத்தோட வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
'முண்டாசுப்பட்டி' படத்தை முதல்ல குறும்படமாக எடுத்தாங்க. அந்தக் குறும்படத்துல காளி வெங்கட்தான் ஹீரோ.

அதுல வந்த முனிஷ்காந்த் கதாபாத்திரத்துல திருப்பூரைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர் நடிச்சிருந்தார். அவருக்குதான் நான் குரல் கொடுத்தேன். அப்புறம் அதே கதையை படமாகப் பண்றாங்கனு கேள்விப்பட்டதும் தயாரிப்பாளர் சி.வி.குமாரைச் சந்திச்சேன். அப்படித்தான் எனக்கு வாய்ப்பு வந்தது.
தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு நன்றி! சொல்லப்போனால், நான் சினிமாவுல வில்லனாகதான் நடிக்கணும்னு முதல்ல ஆசைப்பட்டேன். 'முண்டாசுப்பட்டி' படத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்படியான கதாபாத்திரங்கள்லதான் நடிச்சேன்.
ராம்குமார் என்னுடைய உடல்மொழியில வேறு மாதிரியான ஒரு விஷயத்தைக் கவனிச்சு என்னுடைய பயணத்தை மாத்திட்டாரு. சினிமா கஷ்டத்தின் உச்சத்தையும் அதனுடைய மறுபக்கத்தின் உச்சத்தையும் காட்டியிருக்கு. சினிமா எனக்கு கடவுள் மாதிரிதாங்க!" என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்துக் கொண்டார்.!
கனவோடு, விடாமுயற்சியும் சேர்ந்தா வெற்றி தான்னு தான் வாழ்க்கை மூலம் சொல்கிறார் முனீஷ்காந்த்!