செய்திகள் :

சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

post image

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து நேரிட்ட பதற்றமான சூழலில் இந்தியா – பாகிஸ்தான் இடையே தானும் தன்னுடைய நிர்வாகமும்தான் மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதெல்லாம் உண்மைதானா?

தன்னுடைய நிர்வாகம் பேச்சு நடத்தியதன் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்படச் செய்ததாக, வெள்ளிக்கிழமை, ‘ஏழு நாள்களில் ஏழாவது முறையாக’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்புகையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது இந்தப் பெருமிதத்தை மீண்டும் வெளிப்படுத்திய டிரம்ப்,  ‘அருகருகேயுள்ள இவ்விரு நாடுகளுக்கும் இடையே இந்த அளவு கோபம் / பகை நல்லது அல்ல; (இப்போது) நடந்திருப்பவை பற்றி மிக்க மகிழ்ச்சி. இது தொடரும் என்றே நம்புகிறேன். இதுவரை எனக்கு அளிக்கப்பட்ட பெருமைகளைவிடப் பெரிய வெற்றி’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளின் பஹல்காம் படுகொலையைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிட்டு, ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் பகுதிகளிலுள்ள முகாம்களின் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய இந்தியா, தீவிரவாதிகளையும் முகாம்களையும்  அழித்தது.

இதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் இந்தியா – பாகிஸ்தான் படைகள் இடையே டிரோன், வான்வழித் தாக்குதல்களும் மோதல்களும் குண்டுவீச்சுகளும் ஏற்பட பெரும் அளவிலான போர் மூண்டுவிடுமோ என்ற அச்சம் நிலவிக் கொண்டிருந்தது.

இவ்வாறான சில நாள்களில் திடீரென மே 10, சனிக்கிழமை மாலையில் (அமெரிக்க நேரப்படி காலையில்), இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகத் தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்!

“இரவு முழுவதும் அமெரிக்கா நடத்திய பேச்சுகளின் முடிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான, உடனடியான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பொது அறிவையும் அதிபுத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தியதற்காக இரு நாடுகளுக்கும் பாராட்டுகள். இவ்விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்தியதற்கு நன்றி!” – இதுதான் டிரம்ப்பின் செய்தி.

அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு வெளியாகி ஏறத்தாழ கால் மணி நேரத்துக்குப் பிறகுதான் இந்தியாவின் சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியானது; ஊடகங்களுக்கு வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

அதேவேளை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ரூபியோவோ   இன்னும் ஒரு படி மேலே சென்று, பொதுவான இடத்தில் இரு நாடுகளும் விரிவான வகையில் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அறிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், இரு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல், ஆசிம் மாலிக் உள்பட இரு நாடுகளையும் சேர்ந்த உயர் தலைவர்களுடன் தாமும்  துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் பேச்சு நடத்தியதாகவும் அமைதி வழியைத் தெரிவு செய்ததில் அவர்களுடைய அறிவாற்றல், விவேகம், ஆளுமைப் பண்பு ஆகியவற்றுக்காக மோடியையும் ஷரீபையும் பாராட்டுவதாகவும் மார்க் ரூபியோ குறிப்பிட்டார்.

ஆனால், இல்லை, இல்லை, இரு நாடுகளுமாக மட்டுந்தான் பேசி முடிவுக்கு வந்தோம் என்று உடனடியாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், மறுநாளும், மே 11, காஷ்மீர் பிரச்சினையையும் கோத்துவிட்டு, ட்ரூத் தளத்தில் ஒரு பதிவிட்டார் அதிபர் டிரம்ப்!

“பெரும் உயிரிழப்புக்கும் பேரழிவுக்கும் வழிவகுக்கும் போர்ச் சூழலை நிறுத்த இதுவே தக்க தருணம் என்பதை உணர்ந்து அறிவாற்றல், விவேகம், துணிச்சலுடன் செயல்பட்டதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் உறுதியான தலைமைகள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  வரலாற்றுச் சிறப்புமிக்க, தீரமிக்க இந்த முடிவுக்கு நீங்கள் வருவதற்கு அமெரிக்காவால் உதவ முடிந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்... இந்த மாபெரும் நாடுகளுடன் வணிகத்தைக் கணிசமான அளவில் உயர்த்தப் போகிறேன். உங்கள் இருவருடனும் இணைந்து, கவலைக்குரிய காஷ்மீர் விஷயத்தில், ‘ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு’ ஒரு தீர்வுக்கு வர முடியுமா? என்று பார்க்கப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப்.

ஆனாலும் இந்திய அரசு வட்டாரங்கள்தான் மறுத்தனவே தவிர வெளிப்படையாக யாரும் எதுவும் சொல்லவில்லை.

மறுநாளும் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா சமரசம் மட்டும் செய்யவில்லை; அணு ஆயுதப் போர் ஏற்படுவதையும் தடுத்திருக்கிறது. சண்டையை நிறுத்த ஒப்புக்கொள்ளா விட்டால் இரு நாடுகளுடனான வணிகத்தையும் நிறுத்திவிடுவேன் என்று எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுத் தலைவர்களிடமும், நாம் நிறுத்திவிடுவோம். நீங்கள் (சண்டையை) நிறுத்தினால் நாங்கள் வணிகம் செய்வோம். நிறுத்தாவிட்டால் நாங்கள் இனிமேல் வணிகம் செய்ய மாட்டோம் என்று கூறியதாகத் தெரிவித்ததுடன், ஏற்கெனவே சமூக ஊடகங்கள்வழி தாம் தெரிவித்த கருத்துகளையும் உறுதிப்படுத்தினார்.

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத மோதலை அமெரிக்கத்  தலைவர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் இல்லாவிட்டால் இது மிக மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கும். பல லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். எனவே, நான் அதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, மே 12 ஆம் தேதி இரவு நாட்டு மக்களுக்காகத் தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. எனினும், டிரம்ப் சொல்லிக்கொண்டிருப்பது பற்றித் தனது 22 நிமிட உரையில் நேரடியாகப் பிரதமர் மோடி எதுவும் தெரிவிக்கவில்லை. என்றாலும், மெலிதாகக் கோடிட்டுக் காட்டுவதைப் போல, பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால்தான் சண்டை நிறுத்தம் செய்ததாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் மே 13 ஆம் தேதி, காஷ்மீர் பிரச்சினையில் பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பையேற்க இந்தியா மறுத்துவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

“காஷ்மீர் பிரச்சினையில் இரு தரப்பில் மட்டும்தான் பேச்சு என்ற நீண்ட கால நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை.

“ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி சண்டை நிறுத்தப்படும் வரை இந்தியாவுக்கும் அமெரிக்க தலைவர்களுக்கும் இடையே பேச்சுகள் நடந்தன. ஆனால், எந்த இடத்திலும் பேச்சில் வர்த்தகம் பற்றி எதுவும் இடம்பெறவில்லை.

“அணு ஆயுத நோக்கில் சிந்திக்கவே இல்லை என்ற பாகிஸ்தானின் மறுப்பையும் சுட்டிக்காட்டிய ரந்தீர் ஜெய்ஸ்வால், அமெரிக்க மத்தியஸ்தம் பற்றிக் குறிப்பிடும்போது, இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் ராணுவ தளபதிகள் பேசிக்கொண்டது பற்றிய நேர விவரங்களை மட்டும் தெரிவித்தார்.

ஆனாலும், அதே நாளில், சௌதி அரேபியாவில் ரியாத்தில் நடைபெற்ற சௌதி – அமெரிக்கா முதலீட்டாளர்கள் அமைப்பில் பேசிய டொனால்ட் டிரம்ப், என்னுடைய மிகப் பெரும் நம்பிக்கை அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துபவனாக இருக்க வேண்டும் என்பதுதான். நான் போரை விரும்பவில்லை என்றார்.

“சில நாள்களுக்கு முன்னர்தான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை மூள்வதைத் தடுத்து நிறுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சண்டை நிறுத்தத்தை என்னுடைய நிர்வாகம் வெற்றிகரமாகப் பேசி முடித்தது.

“இதற்காக நான் பெரிய அளவில் வணிகம் செய்வேன். ஃபெல்லோஸ், கம் ஆன், நாம் உடன்பாட்டுக்கு வருவோம். ஏதேனும் வணிகம் புரிவோம்.

“அணு ஆயுத ஏவுகணைகளை விற்பனை செய்ய வேண்டாம். அழகான விஷயங்களை பரிமாறிக்கொள்வோம். அவர்கள் இருவருமே ஆற்றல் வாய்ந்த தலைவர்கள், வலுவான தலைவர்கள்., நல்ல தலைவர்கள், திறமான தலைவர்கள். எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டது. அப்படியே தொடரும் என நம்புகிறேன்” என்ற டிரம்ப், கூடவே, என்ன பிரமாதமாக வேலை பார்த்தீர்கள் என்று மார்க் ரூபியோவுக்கும் துணை அதிபர் வான்ஸுக்கும்கூட பாராட்டுகளைத் தெரிவித்தார். “அவர்கள் (மோடி, ஷரீப்) இருவரையும் அழைத்துக்கொண்டு எங்கேயாவது இரவு உணவுக்குக்கூட செல்லலாம்; ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்குமல்லவா?” என்றும் குறிப்பிட்டார்.

தோஹாவில் பெரு வணிகர்களிடையே மே 15-ல் பேசும்போது, இந்தியாவில் எதற்காக ஐபோன் தொழிற்சாலைகளைத் திறக்கிறீர்கள், அமெரிக்காவில் தொடங்குங்கள் என்று ஆப்பிள் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்த டிரம்ப், உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. அமெரிக்க பொருள்களுக்கு முற்றிலும் வரிகள் விதிப்பதில்லை (ஸீரோ டாக்ஸ்) என்ற ஒரு திட்டத்துடன் (இப்போது) அவர்கள் முன்வந்திருக்கின்றனர் என்று அறிவித்தார்.

கத்தாரிலுள்ள அல் உதெய்த் விமான தளத்தில் அமெரிக்க ராணுவத்தினரிடையே பேசும்போது, “...அப்புறம், நான் செய்தேன் என்று சொல்லிக்கொள்ள நான் விரும்பவில்லை. கடந்த வாரம் நிலைமை மேன்மேலும் மோசமாகிக் கொண்டிருந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவி செய்தேன் என்பது உறுதி.

“சண்டைக்குப் பதிலாக நாம் வணிகம் செய்யலாம். பாகிஸ்தான் மிகவும் சந்தோஷப்படும். இந்தியா மிக, மிக சந்தோஷப்படும். உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் டிரம்ப்.

உடனே, இவ்விரு பிரச்சினைகளுக்குமாக, எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுடனான எங்களுடைய உறவுகளும் பேச்சுகளும் இரு தரப்பு சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும். ஆண்டாண்டு காலமாக  இந்த நாட்டின் ஒருமித்த கருத்து இதுதான் என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகம் தொடர்பான பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் சிக்கலானவை. எல்லாம் பேசப்படுகின்றன; எதுவும் முடிவு செய்யப்படவில்லை. எந்தவொரு வணிக உடன்பாடு என்றாலும் பரஸ்பரம் பயனடைவதாக இருக்க வேண்டும்; இரு நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். வணிகப் பேச்சுகளில் அதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. அது நடைபெறாத வரையிலும் இதுபற்றிய எந்தவொரு முடிவும் முழுமையானதல்ல என்றும் தெரிவித்தார் ஜெய்சங்கர்.

இவற்றுக்கும் பிறகுதான் வெள்ளிக்கிழமை விமானத்தில் பறந்துகொண்டிருக்கும்போது மறுபடியும் அதாவது, ‘ஏழு நாள்களில் ஏழாவது முறையாக’ இந்தியா – பாகிஸ்தான் இடையே தாம் மத்தியஸ்தம் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார் அதிபர் டிரம்ப்.

1971 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானை முன்வைத்து போர்ச் சூழல் (டிசம்பர் தொடக்கத்தில் போர் தொடங்கியது).

அமெரிக்கா சென்றிருந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடனான வெள்ளை மாளிகைச் சந்திப்பில், ‘பாகிஸ்தானுக்குள் இந்தியா மூக்கை நுழைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது. இந்தியாவுக்குப் பாடம் கற்பிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் குறிப்பிட்டார். உடனே, நேருக்கு நேராக எதிர்வினையாற்றிய இந்திரா காந்தி, ‘அமெரிக்காவை நண்பனாகத்தான் இந்தியா நினைக்கிறது, எஜமானாக அல்ல. என்ன செய்ய வேண்டும் என்கிற திறமை இந்தியாவுக்கு இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரையும் எவ்வாறு கையாள வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்’ என்று குறிப்பிட்டார்.

மட்டுமல்லாமல், நிக்சனுடன் கூட்டாக நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துவிட்டார் இந்திரா காந்தி (இந்தத் தகவலைத் தன்னுடைய சுய சரிதையில் அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் குறிப்பிட்டிருக்கிறார்).

பின்னர், இந்தியா திரும்பியவுடன் வாஜபேயியை இந்திரா காந்தி அழைத்துப் பேசியதும் ஐ.நா. அவைக்குச் சென்று இந்தியா சார்பில் வாஜபேயி பேசியதும் இதன் தொடர்ச்சியானவை, பாகிஸ்தான் போரும் வங்கதேசத்தின் தோற்றமும் சேர்த்து.

1999-ல் நடைபெற்ற கார்கில் போரின்போது, அமெரிக்கா வந்திருந்த அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுடன் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் பேச்சு நடத்தினார். தொடர்ந்து, இந்தியப் பிரதமர் வாஜபேயியை அழைத்து, (1999, ஜூலை 2) அமெரிக்கா வருமாறும் பேச்சு நடத்தலாம் என்றும் அழைப்பு விடுத்தார். ஆனால், திட்டவட்டமாக வாஜபேயி மறுத்துவிட்டார். பாகிஸ்தான் விஷயத்தில் இவையெல்லாம் வரலாறு.

உள்ளபடியே, இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் ஏற்படச் செய்ததில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பங்களிப்பு இருக்கிறதா?  இல்லையா? டிரம்ப்பும் அவருடைய குழுவினரும் செயல்பட்டார்களா? இல்லையா?

பாகிஸ்தானின் தீவிரவாத வளர்ப்பு பற்றியோ, பஹல்ஹாம் படுகொலையின் தொடர்ச்சியாகத்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது பற்றியோ சுட்டிக்காட்டி, இந்தியா பக்கம் நிற்க இவர்கள் ஏன் மறுக்கிறார்கள்?

பன்னாட்டு நிதியத்திலிருந்து (ஐஎம்எப்) இத்தனை ஆயிரம் கோடி கடனையும் பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிட்டு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் எவ்வாறு ஒரே தட்டில் வைத்து எடையிட முடியும்?

இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை பெற்றதும், தனித்தனி நாடுகளாக உருவானதும் 1947 ஆம் ஆண்டில்தானே. அல்லாமல் ஆயிரம் ஆண்டு காலப் பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறாரே டிரம்ப்?

காஷ்மீர் பிரச்சினையில் எந்தவொரு நாட்டின் மத்தியஸ்தத்தையும் ஏற்பதில்லை என்பதுதான் காலங்காலமாக இந்தியாவின் நிலைப்பாடு. அப்படியிருக்க, இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை நிறுத்த அறிவிப்பை எவ்வாறு டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு அதிர்ச்சியளித்தார்? மீண்டும் மீண்டும் அதையே ரிப்பீட் செய்துகொண்டிருப்பதுடன் புதிது புதிதாகத் தகவல்களையும் அவர் தெரிவிக்கிறார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்தே தடாலடியாக நிறைய பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கிறார் டிரம்ப். அருகிலுள்ள நாடான கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணம் என்றதில் தொடங்கி, கிரீன்லாந்தை விலைக்கு வாங்கிச் சேர்த்துக்கொள்ளப் போவதாகத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு எதிராக அதிரடியான வரிவிதிப்புகள் வரை!

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் போரை எவ்வளவோ மெனக்கெட்டும் இவர்களால் முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. வெள்ளை மாளிகைக்கே வந்து இவர்களின் மிரட்டலுக்கு எல்லாம்  பணியாமல் எழுந்திருந்து போய்விட்டார் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி. பல்லாயிரக்கணக்கில் மக்கள் செத்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல் – காஸா போருக்கும் தீர்வு காண முடியவில்லை.

ஆனால், இந்தியா – பாகிஸ்தான் விஷயத்தில், ‘வணிகத்தை நிறுத்திவிடுவோம் என எச்சரித்தோம்; அவர்கள் போரை நிறுத்த சம்மதித்துவிட்டார்கள்’ என்று கூறுகிறார்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையை முன்வைத்து உலகின் ‘பெரிய அண்ணனாக’ உருப்பெற டிரம்ப் முனைகிறாரா? அல்லது அவர் சொல்வதெல்லாம் உண்மையா?

‘நண்பர்’ டொனால்ட் டிரம்ப்புக்காகத் தேர்தல் பிரசாரம் எல்லாம் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி; குஜராத்துக்கும் அவரைக் கூட்டிவந்து கொண்டாடியிருக்கிறார். விரைவில் டிரம்ப்பின் மத்தியஸ்த வசனங்களுக்கு நல்லதொரு முடிவு காண வேண்டும். அல்லாமல், உலகில் 150 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டைப் பற்றி, மிகவும் உணர்வுபூர்வமான, மூன்றாம் தரப்பே கூடாது என்கிற ஒரு பிரச்சினையில், நான், நானே காரணம் என ஒருவர் தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டிருப்பது, அவர் அமெரிக்காவின் அதிபராகவே இருந்தாலும்கூட, அழகல்லதானே!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியா் மாநாடு?

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியா் இளைஞா் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது. 12 ஆ... மேலும் பார்க்க

மற்றுமொரு மாநில சுயாட்சித் தீர்மானம் - மாற்றம் விளையுமா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்தியுள்ள ஆட்சி முறை இணையிலாத் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால், அதுவே பல நடைமுறைச் சிக்கல்களையும் அவ்வப்போது நம்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!

வங்கதேச விடுதலை, சியாச்சின், கார்கில், துல்லிய தாக்குதல் என்றெல்லாம் அவ்வப்போது சண்டைகள் அல்லது மோதல்கள் நடந்திருந்தபோதிலும் – இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன், 1965-ல், நடந்ததுதான் இந்தியா – பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடும் சமூக – பொருளாதார ஆய்வு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தனிநபர் சொத்துரிமைக்கு எதிரானது; மாவோ கருத்தியலின் எதிரொலி. காங்கிரஸை ஆட்சி அமைக்கத் தேர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

பைன் மரக் காடுகளுக்கு நடுவிலான பெரும் புல்வெளி. திடீரென மரங்களுக்குப் பின்னிருந்து சீருடையணிந்த அடையாளந் தெரியாத சிலர் துப்பாக்கியேந்தியபடி வெளியே வருகின்றனர். திரண்டிருந்த மக்களை நோக்கிச் சுடுகின்றனர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

கூட்டணியா? கூடவே கூடாது... முடியவே முடியாது... நாங்கள்ளாம் யாரு?... இவிங்களோட கூட்டணி சேர்ந்து எங்களுக்கு ஆகப் போவது என்னங்க? அதெல்லாம் சரியா வராதுங்க... நாங்க இல்லாம, போன தேர்தல்ல என்ன நடந்துச்சு பார... மேலும் பார்க்க