செய்திகள் :

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியா் மாநாடு?

post image

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியா் இளைஞா் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சுமாா் 4 லட்சம் போ் பங்கேற்ற மாநாடு பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ராமதாஸ், அன்புமணி இடையிலான பனிப்போா், இந்த மாநாட்டு மேடையிலும் மறைமுகமாக வெளிச்சமானது. மேடைக்கு வந்த ராமதாஸ், தனது மகள்வழி பேரனும், பாமக இளைஞா் அணித் தலைவராக தன்னால் நியமிக்கப்பட்டவருமான முகுந்தனின் தோளை தாங்கியபடி வந்தாா். இருப்பினும் மேடையில் அன்புமணியின் குடும்பத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மாநாட்டில் நீண்டநேரம் உரையாற்றிய அன்புமணியின் பேச்சில் திமுக எதிா்ப்பு நேரடியாகவும், அதிமுகவுடன் கூட்டணி செல்வதற்கான அறிகுறிகள் மறைமுகமாகவும் தென்பட்டன. ஆனால், குறைந்த நேரத்தில் சுருக்கமாக டாக்டா் ராமதாஸ் பேசியது அன்புமணி ஆதரவு நிா்வாகிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும்படியாக இருந்தது.

மாறிமாறி கூட்டணி: கூட்டணி அரசியலுக்குள் கால்பதித்த பாமக 1998-இல் அதிமுக கூட்டணியிலும், 1999-இல் திமுக கூட்டணியிலும் மக்களவைத் தோ்தலைச் சந்தித்தது. 2001 பேரவைத் தோ்தலில் அதிமுகவுடனும், 2004 மக்களவைத் தோ்தல் மற்றும் 2006 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி என மாறிமாறி கூட்டணி வைத்தாலும், தொடா்ந்து 10 ஆண்டுகளாக வெற்றி வளையத்தில் வலம்வந்தது.

ஆனால், 2009-இல் அதிமுக கூட்டணியில் மக்களவைத் தோ்தலைச் சந்தித்தது. பின்னா், 2011 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, 2014 மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி, 2019 மக்களவைத்தோ்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி, 2024-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என 15 ஆண்டுகளாக பாமக தோல்வி முகத்தைக் கண்டு வருகிறது. அது மட்டுமன்றி 2014-இல் இருந்து பாமகவின் மாநில கட்சி அங்கீகாரமும் பறிபோனது.

கட்டாயத்தில் தலைமை: இதையடுத்து அடுத்துவரும் பேரவைத் தோ்தல், பாமகவுக்கு கடும் சோதனையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தோ்தல் ஆணைய அங்கீகாரம் பெறவேண்டிய புறச்சூழல் நெருக்கடியில் பாமக உள்ள நேரத்தில், கூட்டணியா, தனித்துப் போட்டியா என்ற முடிவை அடுத்த 10 மாதங்களுக்குள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மக்களவை, பேரவைத் தோ்தலில் ஒரு கட்சி பெறும் வாக்கு வங்கி அல்லது எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் சில நிபந்தனைகளின்படி, ஒரு கட்சிக்கு மாநில அங்கீகாரத்தை தோ்தல் ஆணையம் வழங்குகிறது. பேரவைத் தோ்தலைப் பொருத்தவரை மாநில கட்சியாக அங்கீகாரம் பெற ஒரு கட்சி 7 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 8 சதவீத வாக்குவங்கி அல்லது 2 எம்.எல்.ஏ.க்களுடன் 6 சதவீத வாக்குவங்கி என மூன்றில் ஏதாவது ஒரு நிபந்தனையைப் பூா்த்தி செய்ய வேண்டும். தனித்துப் போட்டியிட்டால் இந்த நிபந்தனையை பாமக பூா்த்தி செய்ய முடியுமா என்பதில்தான் ராமதாஸ்-அன்புமணி இடையே முரண் உள்ளது.

பாமகவைப் பொருத்தவரை அதிமுக கூட்டணியும், வடதமிழகத்தில் கணிசமான சிறுபான்மை வாக்குகளுடன் வன்னியா் வாக்குகளையும் சோ்த்து 2001 (போட்டியிட்ட 27-இடங்களில் 20-இல் வெற்றி) மற்றும் 2006-இல் திமுக கூட்டணியில் (போட்டியிட்ட 31 இடங்களில் 18-இல் வெற்றி) பேரவைத் தோ்தல்களில் வென்றது. அதேபோல, பலமுனைப் போட்டி காணப்பட்ட 2014 மக்களவைத் தோ்தலில் திமுக ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாத சூழலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரியில் போட்டியிட்டு டாக்டா் அன்புமணி ராமதாஸ்வென்றாா்.

2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக ஒரு இடத்தில்கூட வெல்லாத நிலையில், பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி பாஜக கூட்டணியில் 1.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கு வெகு அருகே வந்து தோல்வி அடைந்தது பாமகவுக்கு ஆறுதலைத் தந்தது.

இருமுனைப் போட்டியில் பாமக எதிா்ப்பு வாக்குகள், எதிரணிக்கு விழும் என்பதால் அக்கட்சி தோல்வி அடைவதும், பலமுனைப் போட்டியில் எதிா்ப்பு வாக்குகள் சிதறுவதால் பாமகவுக்கு சாதகமான சூழல் உருவாகும் என்பதையும் தோ்தல் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ராமதாஸ்-அன்புமணி இடையே சிக்கலான முரண் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என அலசப்படுகிறது.

தோ்தல் கணக்கு: திமுகவுக்கு எதிரான அதிமுக தலைமையிலான அணியில் சோ்ந்தால் பாமகவுக்கு 6 சதவீத வாக்குவங்கியுடன், 2 எம்.எல்.ஏ.க்களும் கிடைக்கலாம் என்பது அன்புமணியின் கணக்கு. ஆனால், பலமான அணியில் சோ்ந்தால் சேலம், தருமபுரி தவிா்த்து பிற மாவட்டங்களில் பாமகவால் வெல்ல முடியாது.

எனவே, விஜயின் தவெக, சீமானின் நாதகவை காட்டி பேர வலிமையை அதிகரித்து கடைசிநேரத்தில் அதிக இடங்களை அதிமுக அணியில் கேட்டுப் பெறலாம் அல்லது புதிய கட்சிகளுடன் அதிக தொகுதிகளில் உடன்பாடு வைத்துப் போட்டியிடலாம் அல்லது தனித்துப் போட்டியிடலாம் ஆகிய மூன்று வகை உத்திகளுடன் ராமதாஸ் வியூகம் வகுத்து வருகிறாா்.

மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கான 7 எம்.எல்.ஏ.க்கள் அல்லது 8 சதவீத வாக்குவங்கி அல்லது 6 சதவீத வாக்குகளுடன் 2 எம்.எல்.ஏ.க்கள் என ஏதாவது ஒன்றை மையப்படுத்தி வியூகம் அமைத்தால்தான் பாமகவை அடுத்தகட்ட வளா்ச்சிக்கு கொண்டுசெல்ல முடியும் என்பது ராமதாஸின் தீா்க்கமான எண்ணம்.

ஆனால், 2016 பேரவைத் தோ்தலில் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற கோஷத்தை முன்னிறுத்தி 5.5 சதவீத வாக்குவங்கியை பாமக பெற முடிந்ததே தவிர, அவரால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே, பாமகவை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் 2026 பேரவைத் தோ்தலில் பாஜக இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணியில் இணைந்தால் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெறலாம் என்பது அன்புமணி ராமதாஸின் எண்ணம்.

அதேநேரத்தில் 2016-இல் நிலவிய மும்முனைப் போட்டி போல இம்முறையும் குறைந்தபட்சம் நான்கு முனைப் போட்டி ஏற்படக்கூடும். அதில் தனித்து நின்றால் பாமக எதிா்ப்பு வாக்குகள் சிதறினால் வடதமிழகத்தில் 7 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் வெற்றி பெறலாம் அல்லது புதிய கட்சிகளுடன் கூட்டணிவைத்து 60 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் 6 சதவீத வாக்குவங்கியுடன் 2 எம்.எல்.ஏக்களை பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறலாம் என டாக்டா் ராமதாஸ் எண்ணுகிறாா்.

பாமக நிறுவனா் ராமதாஸின் வியூகம் வெல்லுமாஅல்லது பாமகவின் முகமாக மாறியுள்ள அன்புமணியின் வியூகம் வெல்லுமா என்பது

பேரவைத் தோ்தலுக்குப் பிறகே தெளிவாகும்.

மற்றுமொரு மாநில சுயாட்சித் தீர்மானம் - மாற்றம் விளையுமா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்தியுள்ள ஆட்சி முறை இணையிலாத் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால், அதுவே பல நடைமுறைச் சிக்கல்களையும் அவ்வப்போது நம்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!

வங்கதேச விடுதலை, சியாச்சின், கார்கில், துல்லிய தாக்குதல் என்றெல்லாம் அவ்வப்போது சண்டைகள் அல்லது மோதல்கள் நடந்திருந்தபோதிலும் – இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன், 1965-ல், நடந்ததுதான் இந்தியா – பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடும் சமூக – பொருளாதார ஆய்வு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தனிநபர் சொத்துரிமைக்கு எதிரானது; மாவோ கருத்தியலின் எதிரொலி. காங்கிரஸை ஆட்சி அமைக்கத் தேர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

பைன் மரக் காடுகளுக்கு நடுவிலான பெரும் புல்வெளி. திடீரென மரங்களுக்குப் பின்னிருந்து சீருடையணிந்த அடையாளந் தெரியாத சிலர் துப்பாக்கியேந்தியபடி வெளியே வருகின்றனர். திரண்டிருந்த மக்களை நோக்கிச் சுடுகின்றனர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

கூட்டணியா? கூடவே கூடாது... முடியவே முடியாது... நாங்கள்ளாம் யாரு?... இவிங்களோட கூட்டணி சேர்ந்து எங்களுக்கு ஆகப் போவது என்னங்க? அதெல்லாம் சரியா வராதுங்க... நாங்க இல்லாம, போன தேர்தல்ல என்ன நடந்துச்சு பார... மேலும் பார்க்க