Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?
Doctor Vikatan: கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்த நினைப்பது தவறு.
கண் தொடர்பான பிரச்னைகளுக்கு தாய்ப்பால் விடுவது நிச்சயம் தவறானதுதான். ஒரு குழந்தைக்கு கண்களில் இன்ஃபெக்ஷன் இருப்பதாக வைத்துக்கொள்வோம். தாய்ப்பாலில் உள்ள பாக்டீரியா கிருமிகள், கண்களில் ஏற்பட்ட இன்ஃபெக்ஷனை மேலும் தீவிரமாக்கும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எந்த வயதினருக்கும் கண்களில் தாய்ப்பால் விடுவதை தவிர்த்தாக வேண்டும்.
காலங்காலமாகத் தொடர்கிற இதுபோன்ற நம்பிக்கைகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து தெளிவு பெற வேண்டியது அவசியம்.
'கண்களில் கட்டி வந்தது... நாமக்கட்டியைக் குழைத்துப் போட்டேன்... சரியாகிவிட்டது' என்று சொல்லிக்கொண்டு வரும் நபர்களை அடிக்கடி பார்க்கிறேன். நாமக்கட்டி என்பது களிமண் மற்றும் சாம்பலின் கலவை தான். மருத்துவராக நான் அதை ஊக்கப்படுத்த மாட்டேன்.

கண்களில் கட்டி வந்து வீங்கும் பிரச்னையை 'ஸ்டை' (Stye) என்று சொல்கிறோம். அது ஒருவகையான தொற்று பாதிப்புதான். அந்தத் தொற்றை ஏற்படுத்தியது பாக்டீரியா கிருமியாக இருக்கும். பாக்டீரியா கிருமித் தொற்றை குணப்படுத்த ஆன்டிபயாடிக் கொடுப்பது தான் சரியான சிகிச்சையாக இருக்கும். எனவே, கண் மருத்துவரைக் கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதோடு, வெந்நீர் ஒத்தடமும் கொடுத்தால் மட்டுமே இந்தக் கட்டி சரியாகும். நாமக்கட்டி போன்ற கைவைத்திய முறைகளைத் தவிர்ப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.